கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள்

கம்பீரமான சில முக்கிய ஆலயங்கள் பற்றிய சுருக்கமாக சில தகவல்கள் :-

மனிதன் தன்னைப் படைத்த இறைவனுக்காகக் கோயில்கள் கட்டி வழிபடுவது வழக்கம். அப்படி வழிபடும் கோயில்களில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் கம்பீரமாய் நிற்கும் கோயில்களின் வரலாறு நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை. அவற்றில் 10 கோயில்களைப் பற்றி சிறு குறிப்புகள்.

1. அம்பர்நாத் கோயில் :-

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள இந்த கோயில் சிவனுக்காகக் கட்டப்பட்டது. இந்த கோயில் அம்பரீஷ்வரா சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது கி.பி 1060 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதனை ஷிலஹாரா மன்னர் சித்தராஜா அவர்களால் கட்டப்பட்டது என்றும் அவருடைய மகன் மும்முனி அவர்களால் புதுப்பிக்கப்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் புராணக்கதைகளோ இதனைப் பாண்டவர்கள் ஒரே கல்லில் கட்டியதாய் கூறுகிறது.

2. ப்ரஹதீஸ்வரர் கோயில் :-

இது தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயில். இது ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்தியாவில் உள்ள பழங்கால கோயில்களில் ஒன்றான இந்த கோயில் சோழர்களின் அழகிய கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கிறது. இது மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கி.பி 1010 ஆம் ஆண்டு இந்த கோயில் கட்டி முடிக்கப்பட்டது.

3.கைலாசா கோயில் :-

கைலாசா அல்லது எல்லோரா கோயில் இந்தியாவின் மிகப்பெரிய குடைவரைக் கோயில்களில் ஒன்றாகும். இது மகாராஷ்டிராவின் எல்லோராவில் அமைந்துள்ளது. இது ஒரே பாறையைக் குடைந்துச் செதுக்கப்பட்ட கோயில் என்று கூறப்படுகிறது அதோடு பல்லவர்களின் கட்டிடக்கலையினைத் தடயங்களாக வைத்திருக்கிறது. வரலாற்று சான்றுகளின்படி இந்த கோயில் கி.பி 8 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

4. மாமல்லபுரம் கடற்கரை கோயில் :-

தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் வங்காள விரிகுடாவை எதிர்நோக்கி இருப்பதால் கடற்கரைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவின் பழமையான கட்டிடக்கலைகளைக் கொண்ட கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது. இது இரண்டாம் நரசிம்ம வர்ம பல்லவன் ஆட்சிக் காலத்தில் சுமார் கிபி 700 வாக்கில் கட்டப்பட்டது.

5. சோம்நாத் கோயில் :-

ஏழாம் நூற்றாண்டில் சிவனுக்காகக் கட்டப்பட்ட இந்த ஆலயம் குஜராத்தில் அமைந்துள்ளது. இது பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும். முதன்முதலில் இந்த கோயில் ஷ்யூனா மரபினரால் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. ஆனால் பலமுறை அழிக்கப்பட்டு மீண்டும் மீண்டும் சீரமைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இறுதியாகக் கொடுங்கோலன் கஜினி முகமதுவால் கி.பி 1024ஆம் ஆண்டு சிதைக்கப்பட்டது.

6. சென்னக்கேசவ பெருமாள் ஆலயம் :-

கர்நாடக மாநிலத்தின் பேளூரில் யாகாச்சி ஆற்றங்கரையில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. இது ஹொய்சாளப் பேரரசினால் 10 மற்றும் 11 ஆம் நூற்றாண்டுக்கு இடையில் கட்டப்பட்டது‌. வைஷ்ணவ ஸ்தலமான இக்கோவில் சோப்புக்கல்லினால் கட்டப்பட்டது.

7. கேதார்நாத் கோயில் :-

இந்த சிவன் கோயிலின் காலம் சரியாகத் தெரியவில்லை என்றாலும், ஆதி சங்கராச்சாரியார் அந்த இடத்தை பார்வையிட்ட பின்னர், கி.பி 8 ஆம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது. கோயிலை அடைய, சாலை வழியாகச் செல்ல முடியாததால் 14 கிலோமீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும். இது பன்னிரண்டு ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாகும்.

8. ஆதி கும்பேசுவரர் ஆலயம் :-

சோழர்களால் சிவனுக்காகக் கட்டப்பட்ட இந்த கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் அமைந்துள்ளது. ஒன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்ட இந்த கோயில் தற்போது 30,181 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இது அப்பர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகாமகம் இங்குச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

9. ஜகத்பிதா பிரம்மா கோயில் :-

இந்த கோயில் பிரம்மாவிற்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகச் சில கோயில்களில் ஒன்றாகும், அவற்றில் மிக முக்கியமான கோயிலும் ஆகும். ராஜஸ்தானில் அமைந்துள்ள இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது.

10. வரதராஜ பெருமாள் கோயில் :-

சிறப்பு வாய்ந்த அத்தி வரதர் உள்ள பெருமை பெற்ற திருத்தலம்.   பெருமாளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த கோயில் இறைவனின் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள இந்த கோயில் சோழர்களால் 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.