புதுடெல்லி: மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதாவின் ஓம் பிர்லா, ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா புண்டி மக்களவைத் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டவர்.

இந்நிலையில், தற்போது நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுள் ஒன்றான மக்களவையின் சபாநாயகர் பதவியை அலங்கரிக்க உள்ளார்.

அவரைப் பற்றிய சில தகவல்கள்;

1. கடந்த 1962ம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பிறந்தார்.

2. பாரதீய ஜனதா யுவ மோர்ச்சாவினுடைய ராஜஸ்தான் மாநில யூனிட்டின் தலைவராக பதவி வகித்தவர்.

3. தனது அரசியலின் தொடக்க காலத்தில், கோட்டா கூட்டுறவு நுகர்வோர் மொத்த வியாபார அங்காடி லிமி‍டெட் தலைவராக தேர்வு செய்யப்பட்டவர்.

4. கடந்த 2014ம் ஆண்டில் முதன்முதலாக கோட்டா புண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் சார்பாக போட்டியிட்ட கோட்டா அரச குடும்பத்தைச் சேர்ந்த இஜயராஜ் சிங்கை, 2 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.

5. இந்த 2019 மக்களவைத் தேர்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் ராம் நாராயண் மீனாவை 2 லட்சத்து 79 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

6. இவர் கோட்டா தெற்கு சட்டசபை தொகுதியில் 3 முறை போட்டியிட்டு ஒருமுறைகூட தோற்றதில்லை.

7. கடந்த 2003-2008ம் ஆண்டுவரையில் நடைபெற்ற வசுந்தரா ராஜே சிந்தியா தலைமையிலான பாரதீய ஜனதா அரசில், நாடாளுமன்ற செயலராக பதவி வகித்தார்.

8. ஆஜ்மீரின் மகரிஷி தயானந்த சரஸ்வதி பல்கலைக்கழகத்தில் M.Com., பட்டம் பெற்றவர்.

9. இவரின் 92 வயது தந்தையான கிருஷ்ணா பிர்லா, கோட்டாவிலுள்ள 99 வயதுடைய பழைய கூட்டுறவு சங்கமான கோட்டா கரம்சாரி சஹ்காரி சமிதி மற்றும் இதர இரண்டு கூட்டுறவு சங்கங்களின் தலைவராகவும் இருந்து வருகிறார்.

10. இவரின் மனைவி டாக்டர்.அமிதா பிர்லா, பெண்கள் சிறப்பு மருத்துவராக கோட்டா அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு, அகன்ஷா மற்றும் அஞ்சலி என்ற 2 மகள்கள் இருக்கிறார்கள்.