Random image

கருப்பு காந்தி ‘காமராஜர்’ பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!

மிழகத்தில்கல்வி கண் திறந்தவர்  காமராஜர். இவரை கருப்பு காந்தி என்றும், கர்ம வீரர் என்றும் அன்போடு அழைப்பதுண்டு. தமிழக வரலாற்றில் காமராஜரை போல் இன்றுவரை  வேறொருவர் தோன்றியதும் இல்லை… இனிமேலும் தோன்றப்போவதுமில்லை.

நாட்டின் வளர்ச்சிக்காக தன்னலமற்று, மக்கள் சேவையே மகேசன் சேவை என்று எண்ணி மக்களின் நலனுக்காக உழைத்த நல்ல உள்ளம் காமராஜருடையது.

குடும்ப சூழல் காரணமாக  6வகுப்புக்கு மேல் அவரால் படிப்பை தொடர முடியாமல் போனது. ஆனால், அவரோ நாட்டின் வளர்ச்சிக்கு கல்வியே கண் என்று அதை முன்னிலைப்படுத்தி, தமிழகத்தை கல்வி வளர்ச்சி மாநிலமாக மாற்றினார்.

தனது 16 வயதிலேயே தேசிய காங்கிரஸ் கட்சியில் தன்னை உறுப்பினராகி, ஆங்கிலேயருக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றார். வேதாரண்யத்தில் நடந்த உப்பு சத்தியாக்கிரக போராட்டத்திலும் கலந்துகொண்டதற்காக கைது செய்யப்பட்டு கல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறந்த பேச்சாளாரும், நாடாளுமன்றவாதியுமான சத்தியமூர்த்தி யின் பேச்சுக்கு அடிமையான காமராஜர், அவரை தனது அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். அதுபோல சத்திய மூர்த்திக்கு காமராஜர் மீது அளப்பரியா அன்பு இருந்தது.

காமராஜரின் அமைச்சரவை இப்போதுபோல் அல்லாமல் 8 பேர் கொண்டதாக இருந்து, தமிழகத்தை சிறப்புமிக்க மாநிலமாக மாற்றியது.

தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் ஆகிய இருவரையுமே தனது அமைச்சரவையில் சேர்த்து அழகு பார்த்தவர் காமராஜர் ஒருவரே.

தமிழுக்கு நல்ல அங்கீகாரத்தை பெற்று கொடுத்தவர் காமராஜர். நீதி மன்றம் அரசு அலுவலகம் அனைத்திலும் தமிழை கொண்டு வந்தார்.

இவ்வளவு சிறப்பு வாய்ந்தவரான காமராஜர், 1967 ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றப் பொதுத் தேர்தலில் தமது சொந்த ஊரான விருதுநகர் தொகுதியில் தோல்வியுற்றார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மூத்த தலைவர்கள் அரசியலில் பதவி வகிக்ககூடாது, என்று கூறி அதற்கு முன்னுதாரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த ஒரே தலைவர் காமராஜர்தான்.

காமராஜர் திட்டம் (K-Plan) மூலம் தனது முதல்வர் பதவியை உதறிவிட்டு, நேருவின் ஆலோசனை யின் பேரில்,  காங்கிரஸ் பேரியக்கத்தின் இந்திய தேசிய தலைவராக உயர்ந்தார்.

நேருவின் மறைவிற்கு பிறகு, பிரதமர் பதவி தன்னை தேடி வந்தபோதும், அதை மறுத்து,  இந்திய பிரதமர்களாக லால் பகதூர் சாஸ்திரியையும், அவரது மறைவுக்கு பிறகு இந்திரா காந்தியையும் பிரதமர் பதவியில் அமர்த்தி அழகு பார்த்தவர்.  இதனால்தான் காமராஜர்.  “கிங் மேக்கர்” என்றும், கருப்பு காந்தி என்றும் அழைக்கப்பட்டார்.

ஆனால் அவருக்கு சோதனை காலம் அவரால் பிரதமர் பதவியில் அமர்த்தப்பட்ட  இந்திரா காந்தியால் வந்தது.

காமராஜரால் பிரதமர் பதவியில் அமரவைக்கப்பட்ட இந்திரா காந்தி, அவருக்கு எதிராக செயல்படத் தொடங்கினார்.

குடியரசுத் தலைவராக நீலம் சஞ்சீவி ரெட்டியை நிறுத்த காமராஜர் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் எண்ணினர். காமராஜரின் செல்வாக்கை குறைக்க எண்ணி இந்திராகாந்தி, குடியரசு தலைவர் தேர்தலுக்குஅவரது தீவிர ஆதரவாளரான வி.வி.கிரி முன்னிலைப்படுத்தி, அவரை வெற்றிபெறச் செய்தார்.

இதன் காரணமாக காங்கிரஸ் இரண்டாவது  பிளவுபட்டது. காமராஜர் இந்திராவுக்கு எதிரான சின்டிகேட் எனப்பட்ட பழைய காங்கிரசிலேயே தன்னை தனது இறுதிகாலம் வரை இருந்தார்.

1948 – ம் ஆண்டு, சென்னை, தியாகராயநகர், திருமலைப்பிள்ளை சாலை, எட்டாம் எண்ணுடைய வீட்டிற்கு குடியேறியவர் இறுதிவரை அந்த வீட்டிலேயே வசித்திருந்தார்.

தன்னுடைய வாழ்நாள் முழுவதையும் சமூகத்தொண்டு செய்வதிலேயே அர்பணித்துக்கொண்ட காமராஜர் , 1975ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.

காமராஜர் இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்தான். என்றைக்கும் தான் ஏழைப்பங்காளன்தான் என்பதை வாழ்நாளில் நிரூபித்துவிட்டு சென்ற உத்தமர்.

சமூகத் தொண்டையே பெரிதாக நினைத்து வாழ்ந்த அவர், கடைசிவரை திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்ந்தார்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபொழுதும் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்து இருந்தார்.

தன்னலமற்ற தொண்டிற்காக, இந்திய அரசு, அவரின் மறைவிற்கு பின்னர் 1976 ம் ஆண்டு “பாரத ரத்னா” விருதினை வழங்கி கவுரவித்தது..

நிஜ வாழ்க்கையில் உண்மையான ஹீரோவாக வாழ்ந்துக் காட்டியவர். அரசியலில் நேர்மை, வாய்மை, தூய்மை, நாணயம் என அனைத்தையும் கற்பித்த மாமனிதராக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவிற்கே வழிகாட்டும் தலைவராக விளங்கியவர்.

தமிழகத்தில் காமராஜர் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, மீண்டும் காங்கிரஸ் அரியணை ஏறியது கிடையாது.

இன்றைக்கு தமிழகம் கண்டுள்ள பல வளர்ச்சிகளுக்கும் பிள்ளையார் சுழி போட்டவர் இந்த கருப்புத் தங்கம்தான்.

தமிழகத்தின் உண்மையான பொற்கால ஆட்சி என்றால் அது காமராஜரின் ஆட்சி மட்டுமே.

மீண்டும் காமராஜரின் ஆட்சி வருமா… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அது பெரும் கனவாகவே தோன்றுகிறது…

ஆனால், ஆட்சி செய்பவர்கள் அனைவரும் காமராஜரின் ஆட்சி அமைப்போம் என்று கூறி, ஊழல் ஆட்சியை நடத்தி வருவதுதான் தமிழக்ததில் நடைபெற்று வருகிறது.