ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தை ஒட்டியுள்ள மராட்டிய மாநிலத்தின் நேன்டட் மாவட்டத்தின் 5 கிராமங்களைச் சேர்ந்த மக்களில் ஒரு பிரிவினர், தங்களின் கிராமங்கள் தெலுங்கானா மாநிலத்துடன் இணைக்கப்பட வேண்டுமென்ற விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

நல்கவோன், போகர், டெக்லூர், கின்வாட் மற்றும் ஹாத்கவோன் ஆகியவையே அந்த 5 கிராமங்கள். அந்தப் பிரிவினர் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை சந்தித்து தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தினர். தெலுங்கானா மாநிலத்தில் செயல்படுத்தப்படும் மக்கள் நலத்திட்டங்களே இதற்கு காரணம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

அந்த கிராமங்களின் மக்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பாக தேர்வு செய்யப்பட்ட பல மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர், வருகின்றன மராட்டிய சட்டமன்ற தேர்தலில், இந்த இணைப்பு கோரிக்கையை முன்வைத்து போட்டியிட முடிவுசெய்துள்ளதாக தெலுங்கானா முதல்வரிடம் தெரிவித்தனர்.

அந்த குறிப்பிட்ட கிராமங்களின் மக்கள், தெலுங்கானாவில் அமல்படுத்தப்படும் மக்கள் நலத் திட்டங்கள், தங்கள் பகுதியிலும் செயல்படுத்தப்பட வேண்டும் அல்லது தங்களை தெலுங்கானாவுடன் இணைந்துகொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவர்கள், இந்த விஷயத்தில் சந்திரசேகர ராவ் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், வரும் மராட்டிய சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பாக போட்டியிட தயாராக இருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த காலங்களில் மராட்டியத்தின் தர்மாபாத் தாலுகாவை சேர்ந்த 40 கிராமங்கள் தெலுங்கானாவோடு இணைய வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றின என்பது நினைவில் கொள்ளத்தக்கது.