டில்லி:

ந்தியாவின் பாரம்பரிய சின்னமான டில்லி செங்கோட்டையை பராமரிக்க தனியார் நிறுவனமான  டால்மியா நிறுவனத்துக்கு ஒப்பந்தம்  கொடுத்ததை தொடர்ந்து மேலும் சில நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் இந்த செயலுக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மேலும் சில நினைவு சின்னங்களை பராமரிக்கும் பணியை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக  மத்திய சுற்றுலாத்துறை இணை-மந்திரி அல்போன்ஸ் கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியின்போதுதான், ஹூமாயூன் கல்லறையை ஆகாகான் அறக்கட்டளைக்கும், தாஜ்மகாலை இந்தியன் ஓட்டல்கள் நிறுவனத்துக்கும் வழங்கியது என்றும், அதை அவர்கள் எப்படி மறந்தார்கள் என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், தற்போது செங்கோட்டையை வழங்கியதுபோல மேலும்  சில நினைவு சின்னங்கள் பராமரிப்பை தனியாரிடம் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

ஏற்கனவே காங்கிரஸ் ஆட்சியின்போது 5 நினைவு சின்னங்களை தனியாரிடம் ஒப்படைத்திருந்தனர். அதில் உள்ள சில பிரச்சினைகளை களைந்து தற்போது அதே திட்டத்தை சரியான பாதையில் கொண்டு வந்துள்ளோம் என்றும் கூறினார்.  மேலும் சில தளங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை உள்ளடக்கி இத்திட்டத்தை நாங்கள் விரிவுபடுத்த உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.