‘’தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்’’ – டி.ஆர்.பாலு,

‘’தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் சேரும்’’ – டி.ஆர்.பாலு,

தி.மு.க.பொருளாளராகத் தேர்வு செய்யப்பட்ட பின்., டி.ஆர்.பாலு, தனது சொந்த மாவட்டமான திருவாரூருக்கு நேற்று முதன் முறையாகச் சென்றார்.

காட்டூரில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மாள் நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த டி.ஆர்.பாலு, ‘’ தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளது’’ என்று தெரிவித்தார்.

‘’எனினும் , இந்த கூட்டணியில் எந்த கட்சியைப் புதிதாகச் சேர்ப்பது என்பது குறித்து கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தான் முடிவு எடுப்பார்’’ என அவர் குறிப்பிட்டார்.

‘’நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில்  திருவல்லிக்கேணி- சேப்பாக்கம் தொகுதியில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா?’’ என்று டி.ஆர்.பாலுவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு டி.ஆர்.பாலு, ‘’ உதயநிதி ஸ்டாலின் , தி.மு.க.வில் மிக முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவர் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடத் தேவை இல்லை. உதயநிதி வரும் தேர்தலில் தமிழகத்தில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவார்’’ என்று பதில் அளித்தார்.

-பா.பாரதி.