என் குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள்….! தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஓலம்…..

சென்னை:

ன் குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கண்டனம் தெரிவித்து உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், தமிழக பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது, அங்கு வந்த தமிழிசையின் மகன் டாக்டர் சுகந்தன் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக கோஷம் போட்டார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மகனின் செயலை கண்டு தமிழிசை அதிர்ச்சி அடைந்தார்.

இதனால் தமிழிசையின் உதவியாளர் மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள்  சுகந்தனை சமாதானப் படுத்தி உள்ளே அழைத்து சென்றார்கள். அதன் பிறகு சென்னை விமான நிலையத்திற்குள் சென்ற தமிழிசைக்கும் அவரது மகனுக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தனது மானம்மகனால் அனைவர் முன்னிலையிலும் போய்விட்டதாக  மகன் மற்றும் குடும்பத்தினரிடம் கதறி அழுததாகவும் செய்திகள் வெளியாயின.

ஏற்கனவே  தமிழக பாஜகவில், தலைமை பதவியை பிடிக்க  இன ரீதியிலான போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில், தமிழிசைக்கு எதிராக எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர்கள் நேரடியாக மோதி வருகின்றனர். தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசையை அகற்ற தீவிரம் காட்டி வரும் அதிருப்தி யாளர்களுக்கு இந்த சம்பவம் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதை வைத்து, தமிழிசையை ஓரம் கட்ட முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதன் காரணமாக  தமிழிசையின் குடும்ப  பிரச்சினையை அரசியலாக்கியும், அவர்மீது சேர்வாரி பூசவும்  முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  தன் மகன் தன் மீது கோபப்பட்ட குடும்ப சூழலை சிலர் அரசியல் ஆக்குவதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது முகநூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளளார். அதில்,

நேற்றைய தினம் திருச்சி செல்வதற்காக நான் குடும்பத்தோடு விமான நிலையம் சென்றேன். நேற்றைய தினம் மரியாதைக்குரிய உத்தரபிரதேச துணை முதல்வர் திரு.தினேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால் , நான் திருச்சி வரவில்லை நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச் சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா? என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார்.

இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது…
குடும்பத்தலைவியாகவும் இருந்துகொண்டு அரசியல் தலைவியாகவும் இருக்கும்போது, குடும்பத்தைவிட அரசியலுக்கு அதிக நேரம் ஒதுக்கும் பல தலைவர்கள் குடும்பத்தில் சந்திக்கக் கூடிய நிகழ்வுகள் தான் இவை .

ஏன் ! அரசியல்வாதியின் மகளாக வளர்ந்த நான் இந்த வலியை அதிகமாகவே அனுபவித்திருக்கிறேன். ஆக சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது , மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன்… அக்கறையோடு விசாரித்த அனைவருக்கும் என் நன்றிகள்…

எந்தெந்த வகையிலாவது எனது அரசியல் வேகத்தை முடக்க நினைப்பவர்களுக்கு எனது பதில் இதுதான்…

என் பணிகளும், பயணங்களும் தொடரத்தான் செய்யும்…

இதில் பாசப்போராட்டங்கள் இருக்கத்தான் செய்யும்…

சவால்களை எதிர்கொள்வதே வாழ்க்கை…

இவ்வாறு பதிவிட்டுள்ளார்.