சென்னை:

சிறுநீரகம் செயலிழப்பு காரணமான மரணப்படுக்கையில் உள்ள தாய்க்கு சிறுநீரகம் தானம் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்று, மகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையின்போது கண்ணீர் சிந்தினார். இந்த நெகிழ்ச்சியான சம்பவம் உயர்நீதி மன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

புதுச்சேரியைச் சேர்ந்த வயதான பெண்மணியான வாணி என்பவர் சிறுநீரக கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சிறுநீரகம் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

அதைத்தொடர்ந்து, அவரது மகன், தனது சிறுநீரகத்தை தானம் தர முன்வந்தார். அதைத் தொடர்ந்து, சிறுநீரக தானம் தொடர்பாக,  உடல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழுவின் ஒப்புதலுக்கு விண்ணபித்தார்.

ஆனால் , உடல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை குழுவினர், சிறுநீரகம் தானம் கொடுப்பவர், திருமணமாகி உள்ளதால், அவரது மனைவின் ஒப்புதல் வேண்டும் என்று என்று கூறி மனுவை நிராகரித்தனர். இதை எதிர்த்து வேர், சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், தனது தாயார் சிறுநீரகம் செயல் இழப்பு காரணமாக உயிருக்கு போராடி வருகிறார். அவரை காப்பாற்ற நான் எனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க முன் வந்தேன் .ஆனால், எனது மனைவியின் ஒப்புதல் இல்லாமல் சிறுநீரகம் தானம் அளிக்க முடியாது என்று அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

நான் தற்போது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதால், அவர் எனக்கு சாதகமாக கையெழுத்து போடமாட்டார். எனது தாய் காப்பாற்றப்பட வேண்டும். எனவே,  எனது சிறுநீரகத்தை தானமாக அளிக்க, அதிகாரிகளுக்கு  உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு முன்பு  விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் வாதங்களை தொடர்ந்து, தாய்க்கு சிறுநீரகம் அளிக்க முன்வந்த மகனின் செயலைக் கண்டு,  நீதிபதி உணர்ச்சிவசப்பட்டு  கண்ணீர் சிந்தினார்.

இது நீதிமன்றத்தில் இருந்த  வழக்கறிஞர்கள் மற்றும் பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, அரசு தலைமை வழக்கறிஞர், இந்த வழக்கு தொடர்பாக, க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக உறுதி அளித்தார்.

பின்னர் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகாரக் குழு, மனுதாரரிடம் புதிதாக வாக்குமூலம் பெற்று அதன் அடிப்படையில் அவரது சிறுநீரகத்தை, அவரது தாயாருக்கு தானமாக அளிக்கலாம் என உத்தரவிட்டார்.