மும்பை

பாஜகவின் மக்களவை உறுப்பினரும் முன்னாள் நடிகருமான சத்ருகன் சின்ஹா காங்கிரசில் இணைந்தது குறித்து அவர் மகள் சோனாக்‌ஷி சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரும் பாஜகவின் பாட்னா சாகிப் மக்களவை தொகுதி உறுப்பினருமான சத்ருகன் சின்ஹா கட்சியின் மேலுள்ள அதிருப்தியால் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். அவர் மகள் சோனாக்‌ஷி சின்ஹா இந்தி திரையுலகில் புகழ்பெற்ற கதாநாயகி ஆவார். இவர் தமிழில் ரஜினிகாந்த் ஜோடியாக லிங்கா என்னும் படத்தில் நடித்துள்ளார்.

சோனாக்‌ஷி சின்ஹா, “என் தந்தை சத்ருகன் சின்ஹா பாஜகவை விட்டு விலகி காங்கிரசில் இணந்தது அவருடைய சொந்த விருப்பமாகும். நாம் ஒரு இடத்தில் மகிழ்ச்சியுடன் இருக்க முடியவில்லை என்றால் அங்கிருந்து மாறுவோம். அதைத்தான் எனது தந்தையும் செய்துள்ளார். அவர் காங்கிரசில் இணைந்ததன் மூலம் மக்களுக்கு மேலும் பல நன்மைகள் செய்து மனத் திருப்தி அடைவார் என நம்புகிறேன்.

ஜெயபிரகாஷ் நாராயணன், அடல் பிகாரி வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டவர்களுடன் ஆரம்பத்தில் இருந்தே எனது தந்தை நெருக்கமானவராக இருந்தார். அதனால் பாஜகவில் அவருக்கு ஒரு தனி மரியாதை இருந்தது. ஆனால் தற்போதுள்ளவர்கள் அவருக்கு சரியான மரியாதை தருவதில்லை என தோன்றுகிறது. எனது தந்தை வெகுநாட்களுக்கு முன்பே கட்சியில் இருந்து விலகி இருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.