சொந்தம் – சிறுகதை

 

சொந்தம்

சிறுகதை

பா.தேவிமயில் குமார்

 

கள்ளக்குறிச்சியின் நகர்ப்புறத்தை ஒட்டிய ஒரு மண்டப வாசல் விழாக்கோலம் கண்டிருந்தது. “நளாயினி, நான் வண்டியை ஓரமா நிறுத்திட்டு வரேன், அதுக்குள்ள நீ பாப்பாவையும், தம்பியையும் கூட்டிட்டுப்  போய், நல்ல இடத்துல உட்காரு,” என்று மண்டப வாசலில் ரத்னாகர் இவர்களை இறக்கி விட்டான்.

நாதஸ்வர சத்தம், மேளதாள சத்தம், விருந்தினர்களின் பேச்சுக்குரல், முகூர்த்த நேரம் நெருங்கி விட்டதால் பரபரப்பு என மண்டபமே விழாக்கோலம் கண்டிருந்தது.

நளாயினி பெண்குழந்தை மீராவை நடக்க வைத்தும், ஆண் குழந்தையான கபிலனை தோளில் சாய்த்துக்கொண்டும் ஓரிடத்தில் அமர்ந்தாள். இவள் அமர்ந்துதான் தாமதம் அருகில் அமர்ந்திருந்த நளாயினியின் நாத்தனார் அதாவது ரத்னாகரின் அக்கா வெடுக்கென எழுந்து சென்று விட்டாள், முதலில் நளாயினிக்கு ஏன் என்றுப் புரியவில்லை, பிறகு தான் யோசித்தாள் கையில் வைத்திருக்கும் குழந்தையும் அமர்ந்திருக்கும் மீராவும் தான் காரணம் என்று, கணவன் வந்தவுடன் நடந்ததைக் கூறினாள்.

“சரி நளா, அதெல்லாம் விடு, கல்யாணம் முடியட்டும், சின்னக்கா, பெரியக்கா, எல்லோரையும் நான் கூப்பிட்டு பேசிப் பார்க்கிறேன், சம்மதப்பட்டால் சரி, இல்லைன்னா, அவங்க, அவங்க வழியைப் பார்த்துட்டு, அடுத்த வேலையைப் பார்ப்போம், என்ன ? சரியா ?”

“சரிங்க” என்றாள் கலங்கிய கண்களோடு,

மண்டபத்தில் திருமணம் முடிந்து முக்கிய உறவினர்கள் மட்டும் எஞ்சியிருந்தனர், மதிய உணவு தயாராகிக் கொண்டிருந்தது. மெல்ல ரத்னாகர் முதலில் சின்ன அக்கா மாமாவையும், பின் பெரிய அக்கா மாமாவையும் அழைத்துத் தன் பக்கத்தில் அமர வைத்தான். முதலில், “உங்கள் இருவருக்கும் என்னக் குறை வைத்தேன், ஏன் என் மேலயும் நளா மேலயும் இவ்வளவு கோபம் ?” என்றான்  ரத்னாகர்.

……. (பதில் ஏதுமில்லை)

“அம்மாவோட நகை நட்டெல்லாம், அவங்களுக்குப் பிறகு உங்க ரெண்டுப் பேருக்கும் தானே கொடுத்தேன், அப்பாரு சொல்லியபடி ஆளுக்கு ஒரு வீட்டு மனைகளைக் கொடுத்தேன், நானும் ஒரு மனையை எடுத்துக்கொண்டேன், வேறு என்ன நான் இன்னும் செய்யணும் ? ஏன் இவ்வளவுக் கோபம்” என்றான்.

முதலில் சின்ன அக்கா ரதி வாய் திறந்தாள்,

“எல்லாம் சரிதாண்டா தம்பி, நான் என் பிள்ளைங்களைப்  படிக்க வைக்க ரொம்பக் கஷ்டப்படறேன், மூணு பிள்ளைங்களையும் கரையேத்தறது எப்டின்னுத் தவிக்கிறேன், இவருக்கும் இப்போது வியாபாரம் ஒன்னும் சரியாயில்லை, தள்ளுவண்டி ஹோட்டல் கடையை வச்சிக்கிட்டு கஷ்ட ஜீவனம் பண்றோம், தோ என் பெரிய பொண்ணு ஆறாவது வந்துட்டா  இன்னும் சின்னது ரெண்டையும் எப்புடி நான் கரையேத்துவேன் ?” என ஆத்திரத்தோடு சொன்னாள்.

“சரிக்கா இப்ப அதுக்கும் இதுக்கும் என்ன முடிச்சுப் போடற ?”

“ஏண்டா ? ஏன் கேட்கக் கூடாது, எனக்காவது கால்காணி நஞ்சை நெலம் இருக்கு, மாடு கன்னு இருக்கு, என்  வூட்டுக்காரரு ஏதோ நடுத்தரமா கொஞ்சநஞ்சம் சம்பாதிக்கிறாரு, அப்படி இருக்கிற எனக்கே என் ஒரேப் பையனப் படிக்க வைக்க, கஷ்டப்படறேன், அவ என்னப் பண்ணுவா ?” என ஆக்ரோஷமாகப் பேசினாள் பெரிய அக்கா.

“சரி எனக்குப் புரியுது, நம்ப வீட்லயேப் புள்ளைங்க இருக்கும் போது, ஏன் இந்த ரெண்டுப் பிள்ளைங்களையும்  தத்து எடுத்தன்னு கேட்கறிங்க இல்லையா ?”

…… (பதில் இல்லை)

“கஷ்டப்பட்டு, ஒவ்வொருப் படியா ஏறி இறங்கிதான் என் மசாலா கம்பெனியை இப்ப கொஞ்சம் முன்னுக்குக் கொண்டு வந்திருக்கேன், நான் இன்னும் நல்ல நிலைமைக்கு வந்ததும் உங்க ரெண்டு பேருக்கும் நிறைய செய்யறேன், இப்ப போதுமா ?” என்றான்.

எங்க ரெண்டு பேருக்கும் எந்தக் குறையுமில்லைன்னு டாக்டர்ங்க சொன்னாலும், குழந்தைப்பேறுன்ற ஒண்ணு எங்களுக்கு இந்த பத்து வருஷத்தில எட்டாக்கனிதான். நானும் நளாவும் அழாத நாளில்லை, கடவுளிடம் முறையிடாத நாளில்லை,  லட்சக்கணக்கில் செலவு செஞ்சும் எந்தப் பலனுமில்லை. இப்ப நீங்க நினைக்கிற மாதிரியே நளாவின் அக்காவும் நெனச்சாங்க, அவங்க வீட்டிலயும்  கஷ்ட ஜீவனம்தான், நான் இந்தப் பக்கம் ஒரு குழந்தை, அந்தப் பக்கம் ஒரு குழந்தைன்னு எடுத்து வளர்த்திடலாம்னு நெனச்சது உண்மைதான், ஆனா ஒருநாள், அந்த எண்ணத்தை மாத்தற மாதிரி ஒரு நிகழ்ச்சி நடந்துச்சி.

நளாவின் அப்பாவுக்கு உடம்பு சரியில்லைன்னு அவங்க கிராமத்துக்கு அவரைப் பார்க்கப் போனோம், அவரைப் பார்த்துட்டு திரும்பும்போது அந்த வீதியில் ஒரே கூட்டம், நளா பிறந்து வளர்ந்த ஊரென்பதால் விசாரித்து விட்டு வரப் போனாள்.

அப்போது இந்தக் குழந்தைகளின் தகப்பன் கள்ளச்சாராயம் குடித்து விட்டு இறந்து விட்டான் என்றும், தாய் அதற்கு முன்பே இரண்டாவது குழந்தையின்பிரசவத்தின் போதே இறந்துவிட்டாள் என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

எந்த ஒரு அடிப்படை வசதியோ, வீடோ, வாசலோ இல்லாதக்குடும்பம்,  உறவினர்களும் அன்றாடங்காய்ச்சிகள், அதனால எந்த அனாதை இல்லத்தில் இந்தப் பிள்ளைகளை சேர்க்கலாம்னு பேசிக்கிட்டு இருந்தாங்க அதைக் கேட்ட நளா என்னிடம் வந்து கண்கலங்கினாள், ஏனோ நான் சென்று பார்த்ததும் என்னையுமறியாமல் குழந்தைகளை தத்து எடுத்துட்டு வந்துட்டேன், என சொல்லும்போதே அக்காள்கள் இருவரின் கண்ணிலும் கண்ணீர் வழிந்தது.

நளா பேசினாள், “பெரிய சித்தி, சின்ன சித்தி, நான் உங்கப் பிள்ளைகள எடுத்து வளர்க்கலன்னு கோபப்பட வேண்டாம், வாழ்க்கையில அப்பா, அம்மா இருவர்தான் குழந்தைகளின் மிகப்பெரிய சொத்து அது உங்கப் பிள்ளைங்களுக்கு நிறைவா இருக்கு, உங்கப் பிள்ளைங்களுக்கு தலைவலி, சளி, காய்ச்சல்னு வந்தா பார்க்க நீங்க இருக்கிங்க, ஆனா இந்த மாதிரிப் பிள்ளைகளுக்கு யாரும் இல்லை, எங்களை மாதிரி குழந்தை இல்லாதவர்களுக்கும் கடைசி காலத்தில் யாருமில்லை, எனவேதான் நாங்கள் இவர்களைத்  தத்தெடுத்தோம்,” என்றாள்.

அப்போது ரத்னாகரின் சின்ன அக்காவின் சின்ன மகள் மண்டபத்தில் தடுக்கி விழுந்தாள், பதறி ஓடி தூக்கினாள் சின்ன அக்கா, பின் வந்து அமர்ந்து,

“ஆமாம் நளா, பாவம் அந்தப் பிள்ளைகளுக்கு யார் இருக்கா ? நீங்க செஞ்சது சரிதான், பணம் இன்னிக்கு இல்லன்னா, நாளைக்கு சம்பாதித்துக்கலாம், ஆனா இளமையில் தான் இந்த மாதிரிக்  குழந்தைகளை பார்த்துக்க ஆளு வேணும், என் பிள்ளைகளுக்கு நானும் என் புருஷனும் இருக்கோம், அதுவே அதுங்களுக்கு, தெம்பு, பாதுகாப்பு சொத்தென்ன பெரிய சொத்து” எனக் கண் கலங்கியவாறுப் பேசினாள்.

அப்போது ரத்னாகரின் பெண்ணுடன் சேர்ந்து இரண்டு அக்காளின் குழந்தைகளும் விளையாடியதைப் பார்த்து ரத்னாகரும் நளாயினியும் மகிழ்ந்தனர். பெரியவர்கள் தான் ரிஷிமூலம், நதிமூலம் பார்க்கிறோம், சிறியவர்கள் உள்ளம் எவ்வளவு தூய்மையாக இருக்கிறது என எண்ணினார்கள்.

உடன், பெரிய அக்காவும், மாமாவும் “நீங்க செஞ்சது சரிதான் தம்பி, இதுவரை எங்களுக்கு, உங்கள் சொத்தெல்லாம் யாரோ சாப்பிடுவாங்களோன்னு யோசிச்சு கொஞ்சம் கோபமா இருந்தோம், இப்ப நாங்க மனசு நிறைவா சொல்றோம் நீ செஞ்சதுதான் சரி” என்றனர்.

குறள்

அன்பகத்து இல்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்

வற்றல் மரம்தளிர்த் தற்று

(குறள் எண் 78)

பொருள்

பாலைவனத்தில் ஒரு மரம் துளிர்ப்பது பயனற்றது, அதுபோல அன்பில்லாத வாழ்க்கையினாலும் பயனில்லை.