அக்டோபர் 2 ஆம் தேதி காங்கிரஸ் பாதயாத்திரையில் கலந்துக் கொள்ளும் சோனியா ராகுல்

டில்லி

வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று காங்கிரஸ் சார்பில் நடைபெற உள்ள பாத யாத்திரையில் ராகுல் காந்தி சோனியா காந்தி உள்ளிட்டோர் கலந்துக் கொள்கின்றனர்.

மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு எதிராக தற்போதைய பாஜக அரசு பல அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது. அத்துடன் பல பாஜக தலைவர்கள் காந்தியைச் சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு புகழாரம் சூட்டி வருகின்றனர். இதற்குக் காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. வரும் அக்டோபர் 2 ஆம் தேதி அன்று காந்தி நூற்றைம்பதாம் ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முடிவடைகிறது.

இதையொட்டி வரும் அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி காங்கிரஸ் சார்பில் நாடெங்கும் பாத யாத்திரை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் காந்திய கொள்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்த்து இந்த பாதயாத்திரை நடைபெற உள்ளது. கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி டில்லியில் இந்த பாதயாத்திரையையும் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வார்தாவில் இந்த பாதயாத்திரையையும் நடத்த உள்ளனர்.

காங்கிரஸ் பொது செயலர் பிரியங்கா காந்தி எந்த இடத்தில் பாதயாத்திரையில் கலந்துக் கொள்வார் என்பது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளி வரவில்லை ஆயினும் அவர் அரியானா மாநிலத்தில் கலந்துக் கொள்ளலாம் என கூறப்படுகிறது. அடுத்த மாதம் அரியானா மாநிலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் பீகார் மாநில காங்கிரஸ் கட்சியும் பிரியங்காவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.