சோனியா காந்தி பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்த பீட்டர் அல்போன்ஸ்

கருணாநிதி சிலை திறப்பு விழா  பொதுக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் பேச்சை சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்து பலரது பாராட்டுக்களைப் பெற்றார்  பீட்டர் அல்போன்ஸ்.

சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற கருணாநிதி சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இவர்களில் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி சந்திரபாபு நாயுடு, பினராயி விஜயன்  உள்ளிட்ட பலர் ஆங்கிலத்தில் பேசினர். இவர்களில் சோனியா, ராகுல் ஆகியோர் பேசியதை மட்டும் தமிழில் மொழி பெயர்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ராகுல் காந்தி ஆங்கிலத்தில் பேசியதை தமிழ்நாடு  காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தமிழில் மொழிபெயர்த்தார். ஆனால் அவரது மொழிபெயர்ப்பு அத்தனை சிறப்பாக இல்லை.  ராகுல் காந்தி பேசிய பல ஆங்கில வார்த்தைகளை திருநாவுக்கரசர் முழுமையாக மொழிபெயர்க்கவில்லை. சில வரிகளையும் அவர் விட்டுவிட்டார்.

வேறு சில வரிகளுக்கு அர்த்தமே மாறிப்போயிருந்தது.

இந்த நிலையில் சோனியா காந்தி உரையாற்றும்போது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பீட்டர் அல்போன்ஸ் அதைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவரது மொழிபெயர்ப்பு மிகச் சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பை மொழிபெயர்ப்பு என்று கூறிவிட முடியாத அளவுக்கு சோனியாவே தமிழில் புலமையோடு பேசுகிறாரோ என்று நினைக்கும் வண்ணம் சிறப்பாக இருந்தது. மேலும் பீட்டர் அல்போன்ஸின் கணீர் குரலும் ஏற்ற இறக்கத்துடன் அவர் பேசியதும் கூடுல் ப்ளஸ் பாயிண்ட்டுகள் ஆயின.

ராகுலுக்கு மொழிபெயர்த்த  திருநாவுக்கரசர்  சில இடங்களில் பேசுவதற்கு திணறினார். சில இடங்களில் சோனியா காந்தியே அதை ஸ்டாலினிடம்  சுட்டிக்காட்டி சிரித்தாப், ஆனால் பீட்டர் அல்போன்ஸ், சோனியா காந்திக்கு மிகச்சிறப்பாக மொழிபெயர்த்து அவரது கருத்துக்களை துல்லியமாக  தமிழக மக்களிடம் கொண்டு சேர்த்தார்.

“இனி எப்போதும் சோனியா, ராகுல் பேச்சுக்களை பீட்டர்தான் மொழிபெயர்க்கும். அப்படிச் செய்தால் ஓட்டுக்கள் கூடும்” என்று காங்கிரஸ்காரர்கள் உற்சாகத்துடன் பேசிக்கொள்ளும் அளவுக்கு இருந்தது பீட்டரின் மொழிபெயர்ப்பு.

கார்ட்டூன் கேலரி