ரேபரேலியில் வேட்புமனு தாக்கல் செய்தார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி

லக்னோ:

.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மக்கள் வெள்ளத்தில் நீந்தி வந்து வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாடு முழுவதும் முதல்கட்ட மக்களவை தேர்தல் 20 மாநிலங்களில் 91 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு  நடைபெற்று வருகிறது. உ.பி. மாநிலம் ரேபரேலி, அமேதி போன்ற தொகுதிகளில், அடுத்த மாதம் மே 6ம் தேதி 5வது கட்ட தேர்தலன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது.

ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் சோனியாகாந்தி இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக  ரேபரேலியில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்ட பூஜையில் சோனியா காந்தியுடன் அவரது மகனும் காங்கிரஸ் கட்சி தலைவருமான ராகுல் காந்தி மற்றும் அவரது சகோதரி பிரியங்கா காந்தி கலந்து கொண்டனர்.

பின்னர் மக்கள் வெள்ளத்தில்  ஊர்வலமாக வந்த சோனியா காந்தி, பிற்பகல் தனது வேட்பு மனுவை, தேர்தல் அதிகாரியிடம் முன் தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சோனியா, பாஜக கடந்த 2004-ம் ஆண்டை  மறந்து விட வேண்டாம். பெரும் செல்வாக்கு உடையவரான வாஜ்பாயையே நாங்கள்  தோற்கடித்தோம்.. மோடி எம்மாத்திரம், இந்த முறை மோடியை நிச்சயம் தோற்கடிப்போம் என்று எச்சரிக்கை விடுத்தார்.