மன்மோகன் சிங் கொரோனாவில் இருந்து குணமடைய வாழ்த்தும் சோனியா காந்தி

டில்லி

கொரோனா பாதிப்பு அடைந்துள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் விரைவில் குணமடைய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  உலக அளவில் தினசரி கொரோனா பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.  தலைநகர் டில்லியில் இந்த பாதிப்பு அதிகமாக உள்ளது.  நாடெங்கும் பல மாநில முதல்வர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கொரோனாவால் பாதிப்பு அடைகின்றனர்.

முன்னாள்  பிரதமரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான மன்மோகன் சிங் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதையொட்டி டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மன்மோகன் சிங்  அனுமதிக்கப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, “டாகடர் மன்மோகன் சிங் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.  நான் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவரின் சார்பிலும் அவர் விரைவில் முழுமையாக குணமடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” எனச் செய்தி அனுப்பி உள்ளார்.