டில்லி

ரும் மே 23தேதி அன்று எதிர்க்கட்சி தலைவர்களை சந்திக்க முடிவு செய்துள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர்  சோனியா காந்தி, அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும்  அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவை தேர்தலில் ஏழாம் மற்றும் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்கு எதிராக ஒரு அணி அமைப்பது குறித்து பல எதிர்க்கட்சிகள் ஆலோசனை செய்து வருகின்றன. இந்த மக்களவை தேர்தலில் பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைக்காது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இதை ஒட்டி தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் ஏற்கனவே திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் பேச்சு வார்த்தை நடத்தி உள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வரும் 23 ஆம் தேதி அன்று பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். அதை ஒட்டி அவர் ராஷ்டிரிய தெலுக்கான சமிதி, ஒய் எஸ் ஆர் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிஜு ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

அன்றைய தினம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனால் இந்த கூட்டம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளும் கலந்துக் கொள்ள தேவையான முயற்சிகளை காங்கிரஸ் தலைவர்கள் எடுத்து வருகின்றனர். மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத் இந்த கூட்டத்தில் கலந்துக் கொள்ள ஒரிசா முதல்வர் நவின் பட்நாயக்கை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

சமீபத்தில் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் புயல் நிவாரணம் குறித்து நடத்திய பேச்சு வார்த்தையின் போது இரு கட்சிகளும் நெருங்கி உள்ளதாக ஊகங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் சோனியா காந்தி தனது கூட்டத்துக்கு நவீன் பட்நாயக்கை அழைத்துள்ளார். ஆனால் நவீன் பட்நாயக் இது குறித்து முடிவு தெரிவிக்காமல் உள்ளார். தேர்தல் முடிவுகளைப் பொறுத்து அவருடைய முடிவும் அமையும் என கூறப்படுகிறது.