டெல்லி: ராஜஸ்தான் நிலவரம் குறித்து வரும் 30ம் தேதி காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் உள்பட 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினர். அவர்கள் கட்சி எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள மறுத்துவிட்டனர்.
19 பேரும் ஆட்சியை கவிழ்க்க முயற்சி மேற்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதையடுத்து, கட்சி தாவல் சட்டத்தின் கீழ் பதவியை பறிப்பது தொடர்பாக 19 பேருக்கும் சபாநாயகர் ஜோஷி நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால் இந்த நோட்டீஸ்க்கு எதிராக ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சச்சின் பைலட் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்து தடை பெற்றனர். அதே நேரத்தில் முதலமைச்சர் கெலாட் ஆளுநரை பலமுறை சந்தித்து, சட்டசபை கூட்டுமாறு வலியுறுத்தினார்.
அதை தொடர்ந்து, அவையை கூட்ட அவர் உத்தரவிட்டுள்ளார். இந் நிலையில் வருகின்ற 30ம் தேதி காணொலி காட்சி மூலம் காங்கிரஸ் .எம்.பி.க்களுடன் சோனியா காந்தி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது ராஜஸ்தான் விவகாரம், கொரோனா பரவல் குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.