தகவல் உரிமைச் சட்டத் திருத்தம் : சோனியா காந்தி கடும் எதிர்ப்பு

டில்லி

த்திய அரசின் தகவல் உரிமைச் சட்டத் திருத்தத்துக்கு சோனியா காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மத்திய அரசு தகவல் உரிமைச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து ஒரு சட்ட மசோதாவை மக்களவையில் அளித்தது. அந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் அந்த மசோதா நிறைவேற்றப்பட்டு  தற்போது மாநிலங்களவையில் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. இந்த மசோதாவை எதிர்த்து காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

சோனியா காந்தி கையெழுத்து இட்டுள்ள அந்த அறிக்கையில் , “சரித்திரப்புகழ் வாய்ந்த தகவல் உரிமைச் சட்டம் 2005 இல் திருத்தங்கள் ஏற்படுத்தியதன் மூலம் மத்திய அரசு முழுவதுமாக வளைந்து விட்டது. இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் பல முறை விவாதம் செய்யப்பட்டு, பரிசீலனை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தை அரசு அழிவின் விளிம்பு நிலைக்குக் கொண்டு வந்துள்ளது.

கடந்த சில வருடங்கலில் இந்த சட்டத்தின் மூலம் 60 லட்சத்துக்கும் மேற்பட்ட  ஆண்களும் பெண்களும் பயனடைந்துள்ளனர். இந்த சட்டம் அனைத்துத் துறை நிர்வாகங்களிலும் ஒரு வெளிப்படைத் தன்மை கலாசாரத்தை உருவாக்கியது. இதனால் நமது ஜனநாயகத்தின் அஸ்திவாரம் மேலும் பலம் அடைந்தது. இந்த சட்டத்தின் மூலம் பல ஆர்வலர்கள் ஏழைச் சமுதாய மக்கள் நலனுக்காக பல தகவல்களைப் பெற்று வந்தனர்.

தற்போதைய மத்திய அரசு இந்த தகவல் அறியும் சட்டத்தை ஒரு தொல்லையாக கருதி தகவல் ஆணையத்தின் சுதந்திர தன்மையை உடைக்க நினைக்கிறது. தகவல்  ஆணையம் என்பது தேர்தல் ஆணையம் மற்றும் புலனாய்வு ஆணையம் போல சுதந்திரத் துறையாக இருந்து வந்ததை அரசு அழிக்க எண்ணி உள்ளது. நாடாளுமன்ற பலத்தின் மூலம் இதை மத்திய அரசு தனது எண்ணத்தை அடையலாம். ஆனால் அது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் உரிமைகளைக் குறைக்கும் முயற்சியாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.