இந்தியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்றியவர் மன்மோகன் சிங்: சோனியா புகழாரம்

--

டில்லி:

ந்தியாவை பொருளாதார ரீதியில் முன்னேற்றியவர் மன்மோகன் சிங் என்று முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவரும், மூத்த தலைவருமான சோனியா காந்தி புகழாரம் சூட்டினார்.

தலைநகர் டில்லியில் உள்ள ஜவஹர் பவனில் நடந்த மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் 101-வது பிறந்தநாள் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பங்கேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டுக்கு ஆற்றிய அரிய சேவைகளை புகழ்ந்து பேசினர்.

மறைந்த இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் பெயரில் அவரது குடும்பத்தின் சார்பில் அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டது. இந்த அறக்கட்டளையின் சார்பில் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இந்திரா காந்தி அமைதி விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2017-ம் ஆண்டுக்கான இந்திரா காந்தி அமைதி விருதுக்கு, இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் ஆயுத ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக அரும்பணியாற்றியதற்காக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டார்.

நேர்மை, பணிவு, மதிநுட்பம், மற்றும் பொறுப்புணர்வு இவற்றின் பிரதிபலிப்பாக திகழ்ந்தவர் மன்மோகன் சிங் என்று சோனியா புகழ்ந்து பாராட்டினார்.

நாடு மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கியிருந்த காலகட்டத்தில் மன்மோகன் சிங் பிரதமராக பொறுப்பேற்றார். அவரது பத்தாண்டு கால சிறப்பான ஆட்சியில் முன்னர் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தியா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்தது என்றும் சோனியா குறிப்பிட்டார்.

அவர் பொறுப்பேற்ற சில மாதங்களுக்குள் அவரது ஆளுமை மற்றும் கொள்கைகளால் உலகளாவிய அளவில் இந்தியாவுக்கு மிகப்பெரிய நன்மதிப்பையும், மரியாதையையும் பெற்றுத் தந்தார். இதற்காக அவர் எப்போதுமே தற்பெருமை பேசிக்கொண்டதுமில்லை, உரிமை கோரியதுமில்லை. மிகவும் எளிமையாகவும், தன்னடக்கத்துடனும் அவர் நடந்துகொண்டார் என்றும் சோனியா காந்தி அவரை பாராட்டினார்.