லடாக் பலிகள் – மோடி அரசை நோக்கி கேள்விக்கணைகளை ஏவியுள்ள சோனியா காந்தி!

புதுடெல்லி: பிரச்சினைக்குரிய லடாக் பகுதியில், முந்தைய சூழலே திரும்பியுள்ளதா? சீன ராணுவம் தனது பழைய இடத்திற்கு திரும்பிச் சென்றுள்ளதா? என்பவை குறித்த உறுதியை மத்திய அரசு வழங்க வேண்டுமென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.

லடாக்கில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன ராணுவத்தால் கொல்லப்பட்டதையடுத்து, பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 20 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்துகொண்ட சோனியா காந்தி, லடாக்கில், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டில், பெரியளவில் சீன ராணுவம் குவிக்கப்பட்டதை கண்டறிவதில், இந்திய உளவு அமைப்புகள் தோல்வியடைந்தனவா? என்ற கேள்வியை எழுப்பினார் அவர்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இந்தப் பிரச்சினையின் பல அம்சங்கள் குறித்து நமக்கு இன்னும் விளக்கம் கிடைக்கவில்லை. அரசிடம் நமக்கு சில கேள்விகள் உள்ளன. எந்த தேதியில், லடாக்கில் சீன துருப்புகள் ஊடுருவின? பொதுவான தகவலின்படி மே 5ம் தேதியா அல்லது அதற்கு முன்னதாகவா?

எல்லைப்புறத்திலிருந்து மத்திய அரசு செயற்கைக் கோள் படங்களைப் பெறவில்லையா? எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நிகழும் வழக்கத்திற்கு மாறான சம்பவங்கள் குறித்து நமது வெளிப்புற உளவு அமைப்புகள் தகவல் அளிக்கவில்லையா?

ராணுவ புலனாய்வு அமைப்புகள், சீன பகுதியிலோ அல்லது இந்தியப் பகுதியிலோ, சீன ராணுவத்தினர் குவிக்கப்படுவது குறித்து அரசை எச்சரிக்கவில்லையா? இதை உளவுத்துறையின் தோல்வி என்று அரசு கருதுகிறதா?”

நாம் அனைத்து விதத்திலும் தோல்வியடைந்த காரணத்தால், தற்போது நமது 20 வீரர்களை இழந்து நிற்கிறோம்” என்றுள்ளார் அவர்.