கொரோனா கால நடவடிக்கைகள் – பிரதமருக்கு, காங்கிரஸ் தலைவரின் விரிவான அறிவுறுத்தல்கள்!

புதுடெல்லி: நாட்டில் தற்போது எழுந்துள்ள கொரோனா இரண்டாவது அலையை கையாள்வது தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி.

இதுதொடர்பாக, காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநில முதல்வர்கள் மற்றும் கூட்டணி அரசுகளில் பங்கேற்றுள்ள காங்கிரஸ் அமைச்சர்களுடன் தான் விரிவான முறையில் கலந்துரையாடியுள்ளதாகவும் சோனியா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

அவர், 3 முக்கிய அம்சங்களை தனது கடிதம் மூலமாக பிரதமருக்கு அறிவுறுத்தியுள்ளார். அந்த 3 அம்சங்களை இப்போது காணலாம்.

* தடுப்பு மருந்துகள் மட்டுமே தற்போது பெரிய நம்பிக்கையாக உள்ளன. ஆனால், பல மாநிலங்களில், அம்மருந்துகள் வெகுசில நாட்கள் மட்டுமே கையிருப்பு உள்ளன. உள்நாட்டு தடுப்பு மருந்து உற்பத்தியை அதிகரிக்கும் அதேவேளையில், அடிப்படை தகுதிகளை நிறைவுசெய்திருக்கும் தடுப்பு மருந்துகளுக்கு அவசரகால அனுமதியளிக்க வேண்டியதும், இந்நேரத்தில் கட்டாயமாகிறது. வயது அடிப்படையில் தடுப்பு மருந்து வழங்கல் விதிமுறையை தேவைக்கேற்ப தளர்த்தி, மாநிலங்களில் நிலவும் சூழலுக்கேற்ப, தடுப்பு மருந்துகளை அனுப்பி வ‍ைக்க வேண்டும்.

* கொரோனா சிகிச்சை தொடர்பான அனைத்து கருவிகள், உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு, ஜிஎஸ்டி வரியிலிருந்து கட்டாய விலக்களிக்க வேண்டும். தற்போது, வெண்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிமீட்டர்கள், ஆக்ஸிஜன் சிலிண்டர்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது.

* கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், பயணக் கட்டுப்பாடுகள், ஊரடங்கு மற்றும் கடைகள், நிறுவனங்களை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மீண்டும் எடுக்கப்படலாம். ஆனால், அத்தகைய நடவடிக்கைகள், கொரோனாவால் ஏற்கனவே பெரிதும் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களை மீண்டும் வதைப்பதை தடுக்க, தகுதியுள்ளவர்களின் வங்கிக் கணக்கில் மாதம் ரூ.6000 செலுத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கு அச்சத்தின் காரணமாக, தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்புவது ஏற்கனவே தொடங்கிவிட்டதால், அவர்கள் பாதுகாப்பாகவும், சிரமமின்றியும் தங்கள் ஊர்களை அடைவதை உறுதிசெய்வதோடு, தங்களின் சொந்த ஊர்களில் சிக்கலின்றி வாழ்க்கை நடத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்க வ‍ேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கண்ட அம்சங்களை, பிரதமர் மோடிக்கு வலியுறுத்தியுள்ளார்.