நாட்டுக்காக வாழ்க்கையை தியாகம் செய்தவர் சோனியாகாந்தி….ராகுல்காந்தி உருக்கம்

பெங்களூரு:

கர்நாடக சட்டமன்ற தேர்தல் நாளை மறுநாள் நடக்கிறது. இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ கர்நாடக சட்டசபை தேர்தல் என்னை அடிப்படையாக வைத்து நடைபெறுவது கிடையாது. பிரதமரை எப்படி கையாள்வது என்பதை இந்த தேர்தல் மூலம் தெரிந்து கொண்டேன். நான் எழுப்பும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாதபோது, மோடி மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் பேசுகிறார். மோடி தனக்குள்ளேயே கோபத்தை வைத்துள்ளார்.

ஒவ்வொருவர் மீதும் அவர் கோபத்தை கக்குகிறார். அரசியலில் நான் அவருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கருதுகிறார். நான் கோவிலுக்கு செல்வதை பாஜக.வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் கோவில்களுக்கு மட்டுமின்றி இதர வழிபாட்டு தலங்களுக்கும் செல்கிறேன். இந்து என்பதற்கான அர்த்தத்தை பாஜக புரிந்துக்கொண்டதாக நான் நினைக்கவில்லை’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ‘‘ பிரதமர் மோடி என்னையும், எனது தாயாரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுகிறார். எனது தாயார் இத்தாலி நாட்டை சேர்ந்தவர் தான். ஆனால் அவர் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை இந்தியாவில் கழித்துள்ளார். நான் பார்த்த இந்தியர்களைவிட அவர் மிக அதிகமான இந்தியராக இருக்கிறார்.

நாட்டுக்காக அவர் தனது வாழ்க்கையை தியாகம் செய்துள்ளார். நாட்டுக்காக துன்பப்பட்டு உள்ளார். எங்களை தனிப்பட்ட முறையில் தாக்கி பேசுவது மோடியின் தரத்தை எடுத்துக்காட்டுகிறது. இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்கள் அவருக்கு மகிழ்ச்சி கொடுக்கிறது என்றால் அதை நான் வரவேற்கிறேன்’’ என்றார்.

‘‘தலித் மக்கள் மீது நடைபெறும் அத்துமீறல்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் பற்றி மோடி வாய் திறப்பது இல்லை. கனிம சுரங்க முறைகேடுகளை செய்த ரெட்டி சகோதரர்களை மோடி பாதுகாக்கிறார். கர்நாடகாவில் காங்கிரஸ் முழு பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும்’’ என்றார் ராகுல்காந்தி.