டில்லி

பரிமலையில் பெண்கள் நுழந்ததை எதிர்த்து காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் நடத்தவிருந்த கருப்புப் பட்டை போராட்டத்தை சோனியா காந்தி தடுத்துள்ளார்.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சபரிமலை கோவிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு அளித்ததால் கேரளாவில் கடும் போராட்டம் நடந்து வருகிறது. பாஜக மற்றும் இந்து அமைப்பினர் தீர்ப்பை எதிர்த்து கடுமையாக போராடி வருகின்றனர். ஆனால் கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசு பெண்களை சபரிமலைக்கு அனுப்ப கடுமையாக முயன்று வருகிறது.

இந்நிலையில் இரு இளம்பெண்கள் சபரிமலைக்குச் சென்று காவல்துறை உதவியுடன் தரிசனம் செய்துள்ளனர். இது மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியும் இந்த செய்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2 நாட்களாக பாஜக மற்றும் இந்து அமைப்பினரின் போராட்டத்தால் மாநிலமே நிலை குலைந்துள்ளது. ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

கேரள கம்யூனிஸ்ட் அரசின் போக்கை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு தினப் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதை ஒட்டி இன்று தங்கள் கைகளில் கருப்புப் பட்டையை கட்டியபடி நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்துக் கொள்ள தீர்மானித்தனர். அதன்படி அவர்கள் கருப்புப் பட்டையை கட்டிக் கொண்டிருப்பதைக் கண்ட காங்கிரஸ் முன்னாள் தலைவி சோனியா காந்தி இது குறித்து விசாரித்துள்ளார்.

உறுப்பினர்களிடம் விவரத்தை அறிந்ததும் அந்த கருப்புப் பட்டி போராட்டத்தை ரத்து செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி பாலின பாகுபாட்டுக்கு எதிரானது எனவும் அதனால் இந்த போராட்டத்தை நாடாளுமன்றத்தில் நடத்தக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவ்ர்கள் கேரளாவில் உள்ளூர் அரசியலை ஒட்டி போராடுவதில் தவறில்லை எனவும் அதை தொடரலாம் எனவும் கூறிஉள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு ஆதரவு அளிப்பதால் டில்லியில் இது போல போராட்டங்கள் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.