டில்லி:

டுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்களை வகுத்து வரும் காங்கிரஸ் கட்சி அதற்கு முன்னோடியாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற குஜராத், இமாச்சல் போன்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுலின் சுற்றுப்பயணம் மற்றும் மக்களுடன் நெருங்கி பழகும் பாங்கு  காரணமாக காங்கிரஸ் பலம் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில்,  எதிர்க்கட்சி தலைவர்களுக்கு காங். மூத்த தலைவரும், முன்னாள காங்கிரஸ் தலைவருமான சோனியாகாந்தி இன்று விருந்து அளிக்கிறார்.

இந்த விருந்துக்கு திமு.க உள்பட 17 கட்சியை சேர்ந்த தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகளுக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

டில்லி  ஜன்பாத் சாலையில் உள்ள சோனியா வீட்டில் இந்த விருந்து நடக்க இருப்பதாகவும், இந்த கூட்டத்தின் போது, அடுத்த ஆண்டு   நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்வது குறித்து விவாதிக்கப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்து விருந்துக்கு  பிஜூ ஜனதா தளம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி உள்ளிட்ட சில கட்சிகள் அழைக்கப்பட வில்லை என்றும் கூறப்படுகிறது.

தற்போதைய நிலையில், பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேற உள்ள நிலையில், மேற்கு வங்க தலைவர் மம்தா பானர்ஜி 3வது அணி அமைக்க முயற்சித்து வருகிறார். அதற்காக திமுக உள்பட மாநில கட்சிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ள நிலையில்,  சோனியா எதிர்க்கட்சி தலைவர்களை விருந்திற்கு அழைத்துள்ளது குறிப்பிடததக்கது.