உங்களுக்கும், உங்கள் படையினருக்கும் மிகுந்த நன்றி! எஸ்பிஜி அமைப்புக்கு சோனியா காந்தி கடிதம்

டெல்லி: எஸ்பிஜி பாதுகாப்பு படை அமைப்பின் தலைவர் அருண்குமார் சின்ஹாவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து இருக்கிறார்.

குடியரசு தலைவர் மற்றும் பிரதமருக்கு மட்டுமே வழங்கப்படும் எஸ்பிஜி எனும்  சிறப்பு பாதுகாப்பு படை சோனியா காந்தி குடும்பத்துக்கு வழங்கப்பட்டு வந்தது. 28 ஆண்டுகளாக சோனியா, ராகுல் மற்றும் பிரியங்கா ஆகியோர் எஸ்பிஜி பாதுகாப்பு வளையத்தின் கீழ் இருந்தனர்.

சோனியா காந்தி குடும்பத்துக்கு அளிக்கப்பட்டு வந்த எஸ்பிஜி  பாதுகாப்பை வாபஸ் பெற்றது மத்திய அரசு. அதற்கு பதிலாக இசட் பிளஸ் பாதுகாப்பை வழங்கப் போவதாக மத்திய அரசு முடிவு எடுத்திருக்கிறது.

இந் நிலையில், எஸ்பிஜி பாதுகாப்புப் படையினர் மிகச் சிறப்பான பாதுகாப்பை வழங்கியதாக அந்த அமைப்பின் தலைவருக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி நன்றி கூறி இருக்கிறார்.

இது குறித்து அவர் எஸ்பிஜி தலைவர் அருண் குமார் சின்ஹாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் சோனியா காந்தி கூறியிருப்பதாவது: எஸ்பிஜி கைகளில் நானும், குடும்பத்தாரும் மிகுந்த பாதுகாப்புடன் இருந்தோம்.

28 ஆண்டுகளாக, ஒவ்வொரு நாளும் தோல்வி அடையாத நேர்த்தியான, அர்ப்பணிப்பு என தீவிர பணியில் எஸ்பிஜி எங்களை பாதுகாத்தது. எஸ்பிஜியும், அதன் படையினரும் மிக சிறப்பாக பாராட்டப்படும் வகையில், வேகத்துடனும், தேசப்பற்றுடனும் செயல்பட்டனர்.

எனவே, எங்களின் குடும்பத்தின் சார்பில், உளமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று சோனியாகாந்தி தெரிவித்து இருக்கிறார்.  இதே போன்று ராகுல் காந்தியும், எஸ்பிஜி படைக்கு நன்றி கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது: ஓய்வின்றி 24 மணி நேரமும் என்னையும், எனது குடும்பத்தையும் பாதுகாத்தமைக்கு மிகுந்த நன்றி. உங்களின் அர்ப்பணிப்பு, ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்புக்கு நன்றி. எதிர்காலம் சிறப்பாக இருக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டு இருக்கிறார்.