டெல்லி: காங்கிரஸ் ஆளும் முதலமைச்சர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக, பல்வேறு தொழில்கள் முடங்கி உள்ளதோடு, மக்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் காங்கிரஸ் ஆளும் முதலமைச்சர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். முதலமைச்சர்கள் அசோக் கெலாட், பூபேஷ் பாகல், அம்ரிந்தர் சிங், நாராயணாசாமி ஆகியோருக்கு அவர் இந்த கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாடு முழுவதும் பொது சுகாதார அவசர நிலை காணப்படுகிறது. அதன் எதிரொலியாக கடுமையான பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதனால் லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக கட்டுமான தொழில்துறையில் இடம்பெயர்ந்துள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்னளர். ஏற்கனவே பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் ஏற்கனவே சரிவில் இருக்கும் இந்த துறையானது இப்போது கோவிட் 19 வைரசால் மீண்டும் பாதிப்பை சந்தித்து இருக்கிறது.

இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, மாநிலங்களில் உள்ள கட்டுமான நலவாரியம், அமைப்புகள் தொழிலாளர்களின் நலனுக்காக அவசரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக வேலையிழந்து தவிக்கும் அந்தத் தொழிலாளர்களுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும். கட்டுமானத் தொழிலாளர்கள் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு பல நல உதவிகளை வழங்க முடியும் என்று அறிவுறுத்தி உள்ளார்.