3 மாதத்துக்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும்: பிரதமருக்கு காங். தலைவர் சோனியா காந்தி கடிதம்

டெல்லி: லாக் டவுன் காலத்தில் 3 மாத காலத்திற்கு இலவச உணவு தானிய திட்டத்தை நீட்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மோடியை வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இலவச உணவு தானியங்களை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும். தற்காலிக ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும்.

லாக்டவுன் ஆரம்பிக்கும் முன்பாக, ஏப்ரல் முதல் ஜூன் வரையில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ், குடும்பங்களுக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்குவது என்று அறிவிக்கப்பட்டது.

மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு எந்தவொரு மத்திய அல்லது மாநில பொது வினியோக திட்டத்தின் கீழ் வராத புலம்பெயர்ந்தோருக்கு 5 கிலோ இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலவச உணவு தானியங்களுக்கான ஏற்பாட்டை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். ஜூலை-செப்டம்பர் வரை, பல மாநிலங்களும் இதைக் கோரியுள்ளன.

மேலும், கணிசமான எண்ணிக்கையிலான ஏழை குடும்பங்கள் பொது வினியோக திட்டத்தில் இருந்து தொடர்ந்து விலக்கப்படுவதால், இதுபோன்ற அனைத்து வீடுகளுக்கும் தற்காலிக ரேஷன் கார்டுகள் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

பிரதமர் மோடிக்கு, சோனியா காந்தி எழுதி இருக்கும் 2வது கடிதம் ஆகும் இது. முன்னதாக, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து கடுமையாக விமர்சித்து அவர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.