சென்னை: 

குப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

நேற்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில்,  முன்னாள் காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியாகாந்தி மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு இடைக்காலத் தலைவராக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவரும் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவராக மீண்டும் அன்னை சோனியா காந்தி அவர்கள் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக வரவேற்கிறேன்.

மிகமிகச் சோதனையான காலகட்டத்தில் 1998 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை 19 ஆண்டுகாலம் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பு வகித்து, காங்கிரஸ் கட்சியை வலிமையுடன் வழி நடத்தியவர். இவரது தலைமையின் கீழ் 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை பத்தாண்டு காலம் மத்தியில் காங்கிரஸ் தலைமை யிலான ஆட்சியை வழி நடத்தி இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வதில் பெரும் துணையாக இருந்தவர்.

கடந்த காலத்தில் இவரது தலைமையின் கீழ் காங்கிரஸ் கட்சி பல வெற்றிகளை குவித்தது. அதைப் போல, மீண்டும் அன்னை சோனியா காந்தி அவர்களின் தலைமையில் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து, வகுப்புவாத சக்திகளை முறியடித்து வெற்றி பெறுவார் என்கிற நம்பிக்கை இன்றைக்கு ஏற்பட்டிருக்கிறது.

சோதனையான நேரத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்க முன்வந்த அன்னை சோனியா காந்தி அவர்களை லட்சோபலட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் சார்பாக பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.