சோனியாவுடன் ராகுல் வெளிநாடு பயணம்

டில்லி

ருத்துவப் பரிசோதனைக்காக சோனியா காந்தியை ராகுல் காந்தி வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்திக்கு கடந்த 2011 ஆம் ஆண்டில் உடல் நலக் குறைவு உண்டானது.  அதை ஒட்டி அவருக்கு அமெரிக்க நாட்டில் அறுவை சிகிச்சை நடந்தது.    அதைத் தொடர்ந்து வருடந்தோறும்  மருத்துவப் பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதை சோனியா காந்தி வழக்கமாகக் கொண்டுள்ளார்.

அதன் படி நேற்று சோனியா காந்தியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளார்.   இது குறித்து ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் சில நாட்கள் இந்தியாவை விட்டு வெளியில் செல்கிறேன்.  என்னுடைய பாஜக நண்பர்களுக்கு வேலை அதிகமாக இருக்காது.  நான் விரைவில் திரும்பி வருகிறேன்” என பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இருவரும் எந்த நாட்டுக்கு செல்கிறார்கள் என்பது தெரிவிக்கப்படவில்லை.   ராகுல் காந்தி ஒரு வாரத்தில் திரும்புவார் எனவும் சோனியா மேலும் சிறிது நாட்கள் கழித்து திரும்புவார் எனவும் கூறப்படுகிறது.