சென்னை,
கில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்த நாளை நலிந்தோர் நல்வாழ்வு தினமாக கொண்டாட காங்கிரஸ் தொண்டர்களுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு வரும் டிசம்பர் 9ந்தேதி பிறந்த நாளாகும்.
அதுகுறித்து  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  திருநாவுக்கரசர் விடுத்துள்ள அறிக்கை:
130 ஆண்டுகால வரலாறு படைத்த இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவராக கடந்த 18 ஆண்டுகளாக பார் போற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றி வருகிற அன்னை சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாளான டிசம்பர் 9ம் நாளை தமிழகம் முழுவதும் நலிந்தோர் நல்வாழ்வு தினமாக காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
soniya
அன்று ஏழைஎளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள், முதியோர் இல்லங்களில் உணவளிப்பது, பள்ளி மாணவ-மாணவியருக்கு சீருடை, நோட்டு புத்தகங்கள் வழக்குகிற வகையில் அந்நாளை கொண்டாட வேண்டும்.
1991ல் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலைக்குப் பின், அன்னை சோனியா காந்தி அவர்கள் 7 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு தலைமையேற்று இந்தியாவையும், காங்கிரஸ் இயக்கத்தையும் பாதுகாக்கிற நோக்கத்தில் 1998ல் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றார்.
அவரது கடுமையான உழைப்பின் காரணமாக 4 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி, 14 மாநிலங்களில் ஆட்சியமைக்கிற நிலைக்கு உயர்ந்தது.
1998ல் மத்தியில் ஆட்சி அமைந்து வகுப்புவாத சக்திகள் தலைதூக்கியதை தடுத்து நிறுத்துகிற வகையில் அன்னை சோனியா காந்தி தலைமையில் மதச்சார்பற்ற சக்திகள் அணி திரள்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையின் காரணமாக அன்னை சோனியா காந்தி வகுத்த வியூகத்தின் அடிப்படையில் 2004 இல் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி மத்தியிலே அமைந்தது.
2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு பிரதமராக அன்னை சோனியா காந்தி பொறுப்பேற்க வேண்டுமென்று நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சியும், லட்சோபலட்சம் காங்கிரஸ் கட்சியினரும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்திருந்தனர்.
ஆனால் அன்னை சோனியா காந்தி அவர்கள் பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார். பொருளாதார நிபுணரான டாக்டர் மன்மோகன்சிங் அவர்களை பிரதமராக ஆக்கினார். 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்து இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்று மகத்தான சாதனைகளைப் படைத்தது.
2014 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்தது. கடந்த காலங்களில் வீழ்த்தப்பட்ட நிலையிலிருந்த வகுப்புவாத சக்திகள் இன்றைக்கு ஆட்சி செய்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
thirunavukaras
இது இந்தியா ஏற்றுக் கொண்ட வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற மதநல்லிணக்க கோட்பாட்டிற்கு விடப்பட்ட மிகப்பெரிய சவாலாகும். ஜனநாயகத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பாக இருந்தாலும் அதை ஜனநாயக ரீதியிலேயே மக்கள் களத்தில் சந்திக்க உறுதி கொண்ட தலைவர் அன்னை சோனியா காந்தி. அன்னை சோனியா காந்தி தலைமைக்கு உற்ற துணையாக காங்கிரஸ் கட்சியை வளர்க்க இளந்தலைவர் ராகுல்காந்தி துடிப்புமிக்க வகையில் செயல்பட்டு வருகிறார்.
இதன்மூலம் நரேந்திர மோடியை களத்தில் சந்தித்து போராடி வருகிறார்.
அன்னை சோனியா காந்தி, இளம் தலைவர் ராகுல்காந்தி தலைமை என்பது நேரு பாரம்பரியத்தின் அடிப்படையில் இந்திய ஜனநாயகத்தில் மக்கள் மனமுவந்து தேர்தல் மூலம் ஏற்றுக் கொண்ட தலைமையாகும்.
1989க்குப் பிறகு கடந்த 27 ஆண்டுகளாக நேரு குடும்பத்தைச் சார்ந்த எவரும் மத்திய அரசின் எந்த பொறுப்பையும் வகிக்கவில்லை என்பதை வாரிசு அரசியல் என்ற அவதூறு சேற்றை அள்ளித் தெளித்து வருகிற வகுப்புவாத சக்திகள் உணர வேண்டும்.
பிரதமர் பதவி தம் மீது திணிக்கப்பட்ட போதுகூட அதை மறுதலிக்கிற அரசியல் பேரான்மைமிக்க தலைவராக விளங்குகிற அன்னை சோனியா காந்தி அவர்களுக்கு வருகிற டிசம்பர் 9 ஆம் தேதி 71 ஆவது பிறந்தநாள். அவரது பிறந்தநாளை ஆக்கப்பூர்வமாக ஆடம்பரமின்றி, ஏழை எளிய மக்கள் பயன் பெறுகிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட வேண்டும்.
இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட, வட்டார, நகர காங்கிரஸ் கமிட்டிகள் சிறப்பாக செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.