கொரோனா அச்சத்தினால் 21 நாட்கள் ஊரடங்கிற்கு உத்தரவிட்டுள்ளார் மோடி. இதனைத் தொடர்ந்து மக்கள், திரையுலகப் பிரபலங்கள் அனைவருமே வீட்டிற்குள் முடங்கிப் போயுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன..

இது தொடர்பாக திரையுலகப் பிரபலங்களும் தங்களுடைய வீடுகள், மண்டபங்கள் உள்ளிட்டவற்றை அரசின் பயன்பாட்டுக்குக் கொடுத்து வருகிறார்கள்

இதனிடையே தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் முன்னணி வில்லன் நடிகராக வலம் வரும் சோனு சூட் தனது ஹோட்டலை மருத்துவப் பணியாளர்களுக்காக வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

“மக்களின் உயிரைக் காப்பாற்ற இரவு பகலாக உழைக்கும் நம் நாட்டின் மருத்துவப் பணியாளர்களுக்கு எனது பங்கைச் செய்வது பெரிய கவுரவம். மும்பையின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து வரும் அவர்களுக்கு ஓய்வு தேவை. இதற்காக மும்பையில் இருக்கும் எனது 6 மாடி ஹோட்டலை கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் தங்க இலவசமாக வழங்குகிறேன். இந்த முன்னெடுப்பு குறித்து மாநகராட்சி மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்குத் தெரிவிக்கப்பட்டுவிட்டது”.