கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அனுப்பிக் கொண்டே இருப்பேன் – சோனு சூட்

கொரோனா நெருக்கடியால் கடந்த மார்ச் மாதத்திலிருந்து தேசிய அளவில் ஊரடங்கு அமலில் இருக்கிறது. இதனால் புலம் பெயர்ந்த, மற்ற மாநிலங்களில் தினக்கூலியாகப் பணியாற்றும் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

சமீபத்தில் நடிகர் சோனு சூட், மும்பையிலிருந்து கர்நாடகா செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்காக பேருந்து ஏற்பாடு செய்து அவர்களை தானே முன்னின்று வழியனுப்பியும் வைத்தார்.

இந்நிலையில் தற்போது உத்தரபிரதேசத்தில் சிக்கியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்காகவும் பேருந்து ஏற்பாடு செய்துள்ளார் சோனு சூட். இதற்காக உ.பி அரசிடம் அனுமதியும் பெற்றுள்ளார்.

கடைசி புலம்பெயர் தொழிலாளி தன் குடும்பத்தோடு சேரும்வரை அவர்களை நான் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு தொடர்ந்து அனுப்பிக் கொண்டே இருப்பேன் என கூறியுள்ள சோனு சூட் ஜூஹூ பகுதியில் இருக்கும் தனது ஹோட்டலை, களப் பணியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள தானமாக கொடுத்துள்ளார்.

மேலும் பஞ்சாபில் இருக்கும் மருத்துவர்களுக்காக 1,500 பாதுகாப்பு உபகரணங்களைத் தந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.