திருவனந்தபுரம்:

கேரள கோயில்களின் மேளதாள இசைக்கு அமெரிக்காவின் சோனி நிறுவனம் ஒட்டுமொத்தமாக இணையதள காப்புரிமை பெற்றுள்ளதற்கு கடும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.


தி சவுண்ட் ஸ்டோரி என்ற படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற கேரளாவைச் சேர்ந்த ரசூல் பூக்குட்டி ஒலி வடிவமைப்பாளராக பணியாற்றியிருக்கிறார்.

இந்த படத்தில் கேரள கோயில்களில் இசைக்கப்படும் மேளதாள வாத்திய இசை இடம்பெற்றுள்ளது.
கேரளாவில் கோலாகலமாக நடைபெறும திரிச்சூர் பூரம் விழாவில் வாசிக்கப்படும் இசையின் ஒரிஜினல் ஒலியை பதிவு செய்ய வேண்டும் என்பது பூக்குட்டியின் கனவு.

அதனை இந்த படத்தில் நிறைவேற்றியிருக்கிறார். இந்த இசைக்கான காப்புரிமையை அமெரிக்காவைச் சேர்ந்த சோனி மியூஸிக் என்டர்டைன்மென்ட் பெற்றுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் நடந்த திருச்சூர் பூரம் விழாவை கோயில் இசையுடன் சேர்த்து சிலர் ஃபேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு செய்தனர்.
ஆனால், சில நிமிடங்களில் அவர்களது ஒளிபரப்பை சோனி நிறுவனம் தடை செய்தது.

ஒரு நிமிடத்துக்கு மேலாக எங்கள் பாண்டி மேளம் மற்றும் பஞ்சவாத்ய இசையுடன் நீங்கள் ஒளிபரப்பும் இசை ஒத்துப்போவதாக விளக்கமும் அளித்தது.

சோனி நிறுவனத்திடம் அனுமதி பெற்றுத்தான் கேரள கோயில்களின் பாரம்பரிய இசையை யாரும் பயன்படுத்த முடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, பூரம் இசையின் காப்புரிமையை சோனி நிறுவனத்துக்கு விற்றுள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரசூல் பூக்குட்டி மறுத்துள்ளார். பிரசாத் பிரபாகர் புரொடக்சன் தயாரித்த படத்தில் இடம்பெற்ற இசையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

திரிச்சூர் பூரம் விழாவை நடத்தும் பரமேக்காவு கோயில் நிர்வாகம் இது குறித்து கூறும்போது, நிலைமையை ஆராய்ந்து வருகிறோம். தேவைப்பட்டால் சோனி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்வோம். பொது நிகழ்ச்சியை யாரும் காப்புரிமை பெற முடியாது.

இந்த இசையை சோனி நிறுவனமோ, ரசூல் பூக்குட்டியோ உருவாக்கவில்லை. இது குறித்து சட்ட ஆலோசனையை கேட்போம் என்றனர்.