சென்னை

மிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீடு விரைவில் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனத் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்னும் அவரது இல்லத்தில் இறக்கும் வரை வசித்து வந்தார்.  அவர் வாழ்ந்த வீடு அவரது நினைவு இல்லமாக மாற்றப்படும் எனத் தமிழக அரசு அறிவித்திருந்தது.   இது குறித்த கேள்விக்குத் தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று சட்டப்பேரவையில் பதில் அளித்தார்.

அவர், “கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் என்னும் இல்லத்தை நினைவு இல்லமாக மற்ற உள்ளதாக அறிவித்தது.   அப்பகுதியில் வசிக்கும் மக்களிடம் இது குறித்து கருத்துக்கள் கேட்கப்பட்டன.  அரசு அதற்கான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

வேதா நிலையத்தை ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றச் சட்ட பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.  நீதிமன்றங்களில்  இது தொடர்பான வழக்குகள் உள்ளன.  அவை விரைவில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.  அந்த வழக்குகள் முடிவடைந்த பிறகு வேதா நிலையம் ஜெயலலிதா நினைவு இல்லமாக மாற்றப்பட உள்ளது” எனப் பதில் அளித்துள்ளார்.