சென்னை,

விரைவில் தாம்பரத்தில் 3வது ரெயில் முனையம் செயல்பாட்டுக்கு வரும் என தெற்கு ரெயில்வே அறிவித்து உள்ளது. இதன் காரணமாக எழும்பூரில் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் வடமாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் சென்ட்ரல் முனையத்தில் இருந்தும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்கள் எழும்பூர் முனையத்தில் இருந்தும் புறப்பட்டு செல்கின்றன. தற்போது இட நெருக்கடி காரணமாக, ஒருசில வடமாநில ரெயில்களும் எழும்பூர் முனையத்தில் இருந்து புறப்பட்டு செல்கின்றன. இதன் காரணமாக எழும்பூரிலும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தாம்பரத்தில் 3வது ரெயில் முனையம் அமைக்க 2013ம் ஆண்டு முதல் ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. தற்போது அதற்கான பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று சோதனை ஓட்டம் ஆரம்பமானது.

சென்னை தாம்பரத்தில் அமைக்கப்பட்டுள்ள மூன்றாவது ரயில் முனையத்தி‌ன் சோதனை ஓட்டம் தொடங்கியது.

ஆகஸ்ட் 7 முதல் 31-ம் வரை சோதனை அடிப்படையில் செயல்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

குவாஹத்தி செல்லும் வாரந்திர விரைவு ரயில், திப்ருகர் எக்ஸ்பிரஸ் ஆகிய 2 ரயில்கள் வருகிற 7 மற்றும் 9ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

சென்னை எழும்பூரில் இருந்து குவஹாத்தி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் எண்:15629 வரும் திங்கட்கிழமை முதல் தாம்பரம் 3-வது ரயில் முனையத்துக்கு கொண்டு வரப்பட்டு இரவு 9.45 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையம் 8-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டு எழும்பூர் வழியாக குவஹாத்தி செல்லும்.

அதே போல திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் எண்:15929 வரும் புதன்கிழமை 9ஆம் தேதி இரவு தாம்பரம் ரயில் நிலைய 8-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்கிறது.

இந்த 2 எக்ஸ்பிரஸ் ரயில்களும் சோதனை அடிப்படையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது.

இதன் பின்னர் மற்ற எந்தெந்த ரயில்கள் தாம்பரம் முனையத்தில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவிக்கும்.

 

எழும்பூரில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்படும் 12 ரயில்களை பாதியாக குறைத்து தாம்பரத்தில் இருந்து இயக்க ஆய்வுகள் நடந்து‌வருவதாகவும் தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ரயில் முனையம் முழுமையாக செயல்படத் தொடங்கும் போது தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் அனைத்தும் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.