விரைவில் இரண்டே மணி நேரத்தில் டில்லி – சண்டிகர் ரெயில் பயணம்

டில்லி

மிக விரைவில் டில்லி – சண்டிகர் ரெயில் பாதையை இரண்டு மணி நேரத்தில் கடக்கும் ரெயிலை அறிமுகப்படுத்த இந்திய ரெயில்வே திட்டமிட்டுள்ளது.

டில்லி – சண்டிகர் ரெயில் பாதை எப்போதுமே பிசியான ஒரு பாதை ஆகும்.  அதில் வளைவுகளும் அதிகம்.  32 மீட்டர் தூரமுள்ள 10 வளைவுகள் அதில் குறிப்பிடத்தக்கவை.   தற்போது இந்த பாதையில் அதிக வேகமாக செல்லும் ரெயில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ஆகும்.  அந்த ரெயில் இந்த 245 கி மீ தூரத்தை சுமார் மூன்றரை மணி நேரத்தில் கடக்கிறது.  மணிக்கு சராசரியாக 110 கி மீ வேகத்தில் பயணிக்கிறது.

தற்போது ஃபிரான்ஸ் உதவியுடன் இந்த தூரத்தை இரண்டு மணி நேரத்தில் கடக்க ரெயில் ஒன்றை இந்தியன் ரெயில்வே நிறுவ உள்ளது.  முதலில் இதற்காக வளைவுகள் இல்லாத நேர்ப்பாதை நிறுவ திட்டமிடப்பட்டது.   ஆனால் அதற்கு நிலங்கள் கையகப்படுத்தவும்,  நேரான பாதை அமைக்கவும் செலவு அதிகமாவதோடு பல நாட்களாகும் என கண்டறியப்பட்டது.

அதனால் கூடியவரை ரெயில்வேயின் உபயோகத்திலுள்ள நிலங்களை கொண்டு வளைவுகளை குறைக்கவும்,  பாதையை மேம்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.  இதற்கான செலவு மதிப்பீட்டை ஃப்ரான்ஸ் நிறுவனம் கணக்கிட்டு வருகிறது.  தற்போதைய மதிப்பீட்டின்படி ரூ.10000 கோடி வரை செலவாகலாம் என தெரிய வருகிறது.  அதாவது ரூ 46 கோடி ஒரு கி மீக்கு செலவாகும் என தெரிகிறது.

இன்னும் இரண்டு வருடங்களில் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு ரெயில்கள் ஓடத் துவங்கும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவிக்கிறது.

 

 

You may have missed