தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேச்சு வார்த்தை : நிதிஷ்குமார்

பாட்னா

பாஜகவுடன் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சு வார்த்தை நடத்த உள்ளதாக பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறி உள்ளார்.

பீகார் மாநிலத்தில் பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் இடையே உறவில் சிறிது மனத்தாங்கல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.   அத்துடன் வரும் 2019 மக்களவை தொகுதியில் இரு கட்சிகளும் கூட்டணியை தொடருமா என்பதில் மிகுந்த சந்தேகம் உண்டாகியது.   இரு கட்சிகளும் ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றம் சாட்டியதால் இந்த சந்தேகம் வலுத்தது.

இந்நிலையில் பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா பீகார் சென்றிருந்தார்.   அப்போது அவர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும் பீகார் முதல்வருமான நிதிஷ் குமாருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.   அதை ஒட்டி இரு கட்சிகளும் சமரசம் ஆகி விட்டதாக தெரிய வந்துள்ளது.   இந்நிலையில் நேற்று பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் நிதிஷ்குமார், “வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.    அந்த தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து விரைவில் பாஜகவுடன் பேச்சு வார்த்தை நடத்த உள்ளோம்.   மாநிலத்தில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளது.   அதில் எங்கள் கட்சிக்கு குறைந்த பட்சம் 12 தொகுதிகளாவது கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது” என தெரிவித்துள்ளார்.