‘அரோகரா’ கோஷம் விண்ணதிர திருச்செந்துாரில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

திருச்செந்தூர்,

ந்தசஷ்டியை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெற்றது.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் நடைபெறும் சூரசம்ஹாரம் விழா உலக பிரசித்தி பெற்றது.

இந்த விழாவை காண நாடு முழுவதும் இருந்து லட்சக்கண்கானோர் செந்தூரில் குவிந்தனர்.

இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 20ந்தேதி தொடங்கியது. 6வது நாளான இன்று சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்தூர் செந்திலாண்டவரின் சூரசம்ஹார விழா, செந்தூர் கடற்கரையில் பக்தர்கள் சரவண கோஷம் முழங்க மக்கள் வெள்ளத்தில் இன்று மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக இன்று  அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

காலை 7 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி யதும் யாகவேள்விகள் துவங்கியது. காலை 9 மணிக்கு பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது.

பகல் 12.10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால தீபாராதனையும், சஷ்டி தீபாராதனையும் நடந்தது. அதன்பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி, அம்பாள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம், தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் சர்வ அலங்காரத்துடன் சம்ஹாரத்திற்கு ஆயத்தமானார்.

முன்னதாக மதியம் 2.30 மணிக்கு சிவன் கோயிலிலிருந்து சூரபத்மான் தனது படை பரிவாரங்க ளோடு புறப்பட்டு வீதி உலா வந்து கோயில் கடற்கரையை வந்தடைந்தான்.

மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் சூரசம்ஹார நிகழ்ச்சி தொடங்கியது.

கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என்று பக்தி முழக்கமிட  மக்கள்  வெள்ளத்தில்   சுவாமி ஜெயந்திநாதர் முதலில் யானை முகமான கஜமுக சூரனுடன் போரிட்டார். சரியாக மாலை 5.06 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தனது வேலால் கஜமுக சூரனை வீழ்த்தினார்.

பின்னர் சிங்கமாக மாறி சூரன் போரிடும் நிகழ்ச்சி நடந்தது. கருணை கடவுளான செந்திலாண்ட வர் சிங்கமுக சூரனை  தனது வேலால் வதம் செய்தார்.

தொடர்ந்து சூரன் தனது சுயரூபத்துடன் சூரபத்மனாக மாறி போரிட்டான். சுவாமி ஜெயந்திநாதர் தனது வெற்றி வேலால் சூரபத்மனை வீழ்த்தினார்.

பின்னர் சேவலாகவும் மாமரமாவும் போரிட்ட சூரனை கருணை கடவுளான சுவாமி ஜெயந்தி நாதர் ஆட்கொண்டார்.

இந்நிகழ்ச்சியின் போது திரண்டிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்திகோஷம் விண்ணை பிளந்தது.

சூரனை வதம் செய்ததும் விரதமிருந்த பக்தர்கள் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர்.சூரசம்ஹாரம் முடிந்ததும் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் பூச்சப்பரத்தில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி வந்தடைந்தார்.

அங்கு சுவாமி, அம்பாளுக்கு சாயாபிஷேகம் எனப்படும் நிழல் அபிஷேகம் நடந்தது.

சூரசம்ஹார  விழாவையட்டி தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மகேந்திரன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டனர்.

கார்ட்டூன் கேலரி