சொப்பன சுந்தரியும், தமிழக அரசும்!

நெட்டிசன்:

பத்திரிகையாளர் ப.கவிதாகுமார் அவர்களது முகநூல் பதிவு:

” கரகாட்டக்காரன் ” படத்தில் சொப்பன சுந்த‌ரியின் காரை நாம் வைத்திருக்கிறோம், சொப்பன சுந்த‌ரியை யார் வைத்திருக்கிறார்கள் என கவுண்டமணியிடம் செந்தில் கேட்பார். அந்த கேள்வி தான் இப்போது தமிழகத்தில் எல்லோருக்கும் எழுகிறது. தமிழக ஆட்சி அதிகாரத்தை யார் வைச்சுருக்கா?

இந்த கேள்வி வருவதற்கு நிறைய சம்பவங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் டெங்குவால் சாவு அன்றாடம் எகிறிக் கொண்டிருக்கிறது. கந்துவட்டியால் ஒரு குடும்பமே தீக்குளித்து செத்துப் போகிறது.

எதோ எரிந்த போது பிடில் வாசித்த நீரோ போல, எடப்பாடி அரசு எம்ஜிஆருக்கு நூற்றாண்டு விழா நடத்திக் கொண்டிருக்கிறது.

மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டும் என சம்சாரிகள் கனவுகளுக்கு எதிராக, சென்னை மக்கள் மழை பெய்யக்கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறார்கள். 2015ம் ஆண்டை போல சென்னை வெள்ளத்தில் மூழ்கி விடுமோ என்ற அச்சம் அவர்களது அச்சம். அதில் உண்மையில்லாமல் இல்லை.

உட்கட்சி பூசலால் உடைந்து கிடக்கும் அதிமுகவின்
செயல்படாத தன்மையை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு பிள்ளையில்லாத வீட்டில் கிழவன் துள்ளிக்குதிப்பதை போல தமிழகத்தில் பாஜக தலைவர்கள் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

ஒரு தொலைக்காட்சியில் இரண்டு நாட்களுக்கு முன் பாஜக மாநிலத்தலைவர் தமிழிசை, தனக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கருப்பு்க்கொடி காட்டியது குறித்து ஆவேசமாக பேசினார். எதற்காக அவர்கள் கறுப்புக்கொடி காட்ட வந்தார்கள்?

மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி வரி குறித்த கருத்துக்கள் இடம் பெற்றதற்கு, பாஜக மாநில தலைவர் தமிழிசை மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசினார். இந்நிலையில், தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யை வளைத்துப் போட பாஜக திட்டமிடுவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதில் அளித்த தமிழிசை , ‘விஜயை வளைத்துப்போட்டு அரசியல் செய்ய வேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. திருமாவளவன்தான் கட்டப்பஞ்சாயத்து செய்து கட்சி அலுவலக இடம் உட்பட பல நிலங்களை வளைத்துப் போட்டுள்ளார்’ என்றார்.

இதுகுறித்த விவாதம் ஒரு தொலைக்காட்சியில் நடந்தது. அதில் தமிழிசை கலந்து கொண்டார். தொலைபேசி வாயிலாக திருமா இணைந்தார். தன் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு என்ன ஆதாரம் இருக்கிறது என்று திருமா கேட்டதற்கு, பொதுவாக எல்லோரும் கூறுவதையே தான் கூறுவதாக தமிழிசை கூறினார். ஒரு கட்சியின் தலைவரான நீங்கள் இப்படியான அவதூறை செய்யலாமா என திருமா கேட்டதற்கு, அதற்கு தமிழிசை உரிய பதிலளிக்கவில்லை.

ஆனால், விசி கட்சியினர் தன்னை போனில் ஆபாசமாக பேசுகிறார்கள் என தமிழிசை கூறினார். அவர்கள் எண்களைக் கொடுங்கள். அவர்களை கட்சியில் இருந்தே நீக்குகிறேன் என்று திருமாவளவன் கூறினார். அவர்கள் பேசியதற்கு மன்னிப்பு கேட்பதாகவும் கூறினார்.

இந்த நிலையில் தான் தமிழகம் முழுவதும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழிசையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஒரு இடத்தில் தமிழிசைக்கு  கறுப்புக்கொடி காட்ட விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் காத்திருக்கின்றனர்.

அப்போது திடீரென பாஜகவினர் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அவர்கள் மீது பாய்கிறார்கள். காவிகள் ஆட்டத்தை காக்கி வேடிக்கை பார்க்கிறது. விடுதலை சிறுத்தைகளை காவிகள் தாக்குகின்றனர். ஆனால், அவர்களை கைது செய்யாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கைது செய்து வேனில் ஏற்றுகின்றனர்.

ஆனால், அப்போதும் வேனில் இருந்த அவர்கள் மீதும் காவிகள் தாக்குதல் நடத்துகின்றனர். அவர்கள் மீது வழக்கு எதுவுமில்லை. தமிழகத்தில் பாஜகவின் வன்முறை கடந்த 4 நாட்களுக்கு முன் நடந்தது. கோட்சேவின் குமாரர்களுக்கு எப்போதும் ரத்த தாகம் நிற்பதில்லை.

பாஜகவின் குட்டி அமைப்பான ஏபிவிபி இன்று  சென்னை வைத்தியராம் தெருவில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தை தாக்க வந்துள்ளனர். அத்துடன் கட்சிக்கொடியையும் எரித்துள்ளனர். அங்கும் காவிகளின் அடவாடியை காக்கிகள் வேடிக்கை பார்த்துள்ளனர்.

தமிழகத்தில் அதிமுக என்ற பெயரில் மறைமுக  ஆட்சி நடத்தி வரும் பாஜக, தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பிரச்னையைக் கிளப்பி அதன் மூலம் ஆதாயம் தேட நினைக்கிறது. அதற்கு பல்லக்கு தூக்கும் எடப்பாடி அன்கோ, தமிழக மக்களைப் பற்றி எந்த கவலையுமின்றி அவர்களின் கட்சியையும், சின்னத்தையும் காப்பாற்ற மோடி அரசின் காலைக் கழுவி தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடைசியாக ஒன்று … மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் உள்ள அதே வைத்தியராம் தெருவில் தான் பாஜகவின் தமிழக தலைமை அலுவலகமான கமலாலயமும் இருக்கிறது என்பதை காவிகள் மறந்து விடக்கூடாது.

– ப.கவிதா குமார்