Random image

‘சொப்பன சுந்தரி’ புகழ் வைக்கம் விஜயலட்சுமிக்கு அக்டோபரில் திருமணம்

சொப்பன சுந்தரி நான்தானே என்ற பாடல் மூலம் தமிழக திரையுலகில்  பிரபலமான, கேரளாவை சேர்ந்த  பின்னணி பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு வரும் அக்டோபர் மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

பார்வையற்றவரான வைக்கம் விஜயலட்சுமி.  ’காற்றே காற்றே’ என்ற பாடல் மூலம் தமிழில் பாடகியாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து   ’வீர சிவாஜி’ படத்தில் பாடிய  ’சொப்பன சுந்தரி நான் தானே’ என்ற பாடல் பட்டிதொட்டியெல்லாம் பரந்து விரிந்து அவரது புகழை பறைசாற்றியது.

பாடகி வைக்கம் விஜயலட்சுமிக்கு கடந்த ஆண்டு சந்தோஷ் என்பவருடன் திருமண ஏற்பாடுகள் நடைபெற்றன. ஆனால், இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக திருமணம் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில்,  தற்போது மிமிக்ரி கலைஞர் அனூப் என்பவருடன்  விஜயலட்சுமி திருமணம்  நடைபெற உள்ளது.

வரும் 10ந்தேதி இருவருக்கும் இடையே நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (அக்டோபர்)  22ஆம் தேதி திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

நிச்சயதார்த்தம் விஜயலட்சமி வீட்டிலும்,  திருமணம் வைக்கம் மகாதேவ் கோயிலிலும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.