திருமலை: இன்று நாடு முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், திருப்பதி ஏமலையான் கோவிலில் சொர்க்கவாசல் வழியாக ஏழுமலையானை தரிசிக்கும் வகையிலான  10 நாட்களுக்கான தர்ம தரிசன டிக்கெட் ஒரே நாளில் விற்றுத் தீர்ந்துள்ளன.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, திருமலையில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.  முன்னதாக  திருமலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கருடாத்திரி நகர் சோதனைச் சாவடியிலிருந்து, திருமலை முழுதும் மலர்களாலும், மின் விளக்குகளாலும் அலங்காரங்கள் செய்யப்பட்டு உள்ளன.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில்,  இந்தாண்டு முதல்முறையாக, வைகுண்ட ஏகாதசியை ஒட்டி,  10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து,  சொர்க்கவாசல் வழியாக செல்லவதற்கு  பக்தர்கள் அதிக  ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதற்காக, இரண்டு லட்சம் விரைவு தரிசன டிக்கெட்டுகளை, தேவஸ்தான நிர்வாகம், ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. இந்த 10 நாட்களுக்கான அனைத்து தர்ம தரிசன டிக்கெட்டுகளும் ஒரே நாளில் விற்று தீர்ந்துவிட்டதாக தேவஸ்தானம் அறிவித்து உள்ளது. மேலும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் ஏற்கனவே ஒரு நாளைக்கு 20 ஆயிரம் டிக்கெட்டுகள் என ஆன்லைனில் வெளியிடப்பட்டு நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் முன்பதிவு செய்துவிட்டனர்.

உள்ளூர் பக்தர்களுக்காக திருப்பதியில் 5 இடங்களில் 10 கவுன்டர்கள் அமைக்கப்பட்டு ஒரு நாளைக்கு 10 ஆயிரம் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என்று தேவஸ்தான்ம் அறிவித்து உள்ளது.

வழக்கமாக வைகுண்ட ஏகாதசி தினத்தன்று 1 லட்சம் முதல் 1.25 லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தருவார்கள். ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 40 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவுள்ளனர்.

அனைத்து பக்தர்களுக்கும் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். கோவிலின் அனைத்து இடங்களிலும் சுத்தப்படுத்தும் பணிகள் 24 மணி நேரமும் மேற்கொள்ளப்படும். எனவே பக்தர்கள் பயமின்றி வருகை புரியலாம் என்று தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது