விஜய் நடிக்கும் 61 வது படம் “மெர்சல்”. அட்லி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.  இன்று விஜய்க்கு பிறந்தநாள் அல்லவா.. இதை முன்னிட்டு அவரது ரசிகர்களுக்கு அளிக்கப்பட்ட பரிசுதான், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்.

ஆனால் இதுவே விவகாரமாகிவிட்டது.

இதுவரை தனது பெயருக்கு முன், “இளைய தளபதி” என்ற அடைமொழி போட்டுக்கொண்டிருந்த விஜய், இந்த புதிய படமான “மெர்சல்” பட போஸ்டரில் “தளபதி” என்று மட்டும் போட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுதான் இப்போது விவகாரமாகி இருக்கிறது.

தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை, அவரது கட்சியினர் “தளபதி” என்று அழைத்து வருகிறார்கள். இந்த நிலையில்  அவருக்கு போட்டியாக, விஜய் “தளபதி” ஆவதை (!) தி.மு.க.வினர் விரும்பவில்லை.

சமூகவலைதளங்களில் தி.மு.க.வினர் தற்போது விஜய்யை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இதனால்  “மெர்சல்” படத்தின் இயக்குநர் அட்லி மற்றும் தனகுக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசனை செய்தாராம் விஜய். முடிவில், “மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தவறுதலாக “இளைய” என்பது விடுபட்டு, “தளபதி” என்று வெளியாகிவிட்டது.  இதனால் யாருக்கேனும் மன வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். ரசிகர்களும் வழக்கம்போல “இளைய தளபதி” என்றே குறிப்பிட்டு போஸ்டர்கள் அடிக்க வேண்டும்” என்று விஜய் கேட்டுக்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டதாம்.

இது குறித்து விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சிக்கு தகவல் தெரிவித்தார்களாம். அவரோ, “இந்த அறிவிப்பை விஜய் வெளியிட்டால் நன்றாக இருக்காது. போஸ்டரில் தவறுதலாக “இளைய” என்பது விடுபட்டுவிட்டது என்று படத்தின் இயக்குநர் அட்லியே தெரிவிக்கட்டும்” என்றாராம்.

ஆக, “வழக்கம்போல் விஜய் “இளைய தளபதி”தான் என்று அறிக்கை வரப்போவது நிச்சயம்” என்கின்றன விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள்.