கொரோனாவைக் காரணம் காட்டி இதர நோய்களை அலட்சியம் செய்தால்… எச்சரிக்கும் மருத்துவ விஞ்ஞானி!

ஜெனிவா: கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, மருத்துவத் துறையின் ஆற்றலில் மிகப்பெரும் பகுதியை கொரோனா சிகிச்சையில் திருப்பிவிட்டு, வேறுபல ஆபத்தான நோய்கள், மருத்துவத்தின் மிக முக்கிய அம்சங்களைக் கண்டுகொள்ளாமல் விடுவது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் உலக சுகாதார நிறுவனத்தின்(WHO) தலைவர் செளம்யா சுவாமிநாதன்.

ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது, “கொரோனா பரவல் தொடர்பாக, ஒவ்வொரு நாடும் அவைகளின் தேவைக்கேற்ப வியூகங்களை வகுத்துள்ளன. நாடுகள் விதித்துள்ள பல கட்டுப்பாடுகள், இடங்களுக்கு ஏற்ப பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன. நோயின் பரவல் உச்சத்தில் உள்ள பல ஐரோப்பிய நாடுகளில், இத்தகைய கடுமையான கட்டுப்பாடுகள் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன என்பதை மறுக்க முடியாது. இன்றைய நிலையில், உலகின் பெரும்பான்மையான மக்கள் வைரஸினால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளனர்.

எல்லாமே அரசின் கைகளிலும், அது மேற்கொள்கின்றன நடவடிக்கைகளின் அடிப்படையிலும் மட்டுமே கிடையாது. மக்களின் ஒருங்கிணைப்பும், அவர்களுடைய புரிதலும் மிக முக்கியம். அதேநேரத்தில், ஒவ்வொரு நாட்டிலும் வைரஸ் தொற்றின் உச்சம் மற்றும் தணியும் சூழலின் காலக்கட்டமும் மாறுகிறது. சில நாடுகளில், உச்சநிலை மாதக்கணக்கிலும், வீரியம் குறைந்தநிலை மாதக்கணக்கிலும் நீடிக்கின்றன.

கொரோனா தாக்கம் தீவிர தன்மையிலுள்ள நபர்களுக்கான Dexamethasone மருந்து பயன்பாடு குறித்து என்னிடம் கேட்டால், அது மிகவும் பழைய மருந்தாகும். அதைப் பொதுவாக தீவிர சிகிச்சைப் பிரிவில் பயன்படுத்துவார்கள். வேறுபல நோய்களின் தீவிரத்தன்மைக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தும் Dexamethasone மருந்து, கொரோனா விஷயத்தில் சிறந்த முறையில் பயன்படுவதாக நிரூபிக்கப்படவில்லை. ஏனெனில், இதுஒரு வைரஸ் தொற்று என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும்.

கோவிட்-19 வைரஸ் தடுப்பு மருந்து எப்போது கண்டுபிடிக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிப்பது மிகவும் கடினமான ஒன்று. பொதுவாக, ஒரு வைரஸ் எதிர்ப்பு மருந்து என்பதற்கு சுமார் 5 ஆண்டுகள் ஆகலாம். ஆனால், கொரோனா விஷயத்தில் உலகம் வேகமான ஒரு நல்முடிவை எதிர்பார்க்கிறது. குறைந்தபட்சம் 12 மாதங்களுக்குள் எல்லாம் நடக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலையில், உலகளவில் மொத்தம் 12 தடுப்பு மருந்துகள் பரிசோதனை கட்டத்தில் உள்ளன. அவ‍ை, ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனை நிலைகளில் உள்ளன. அந்த தடுப்பு மருந்துகளில் 2 அல்லது 3 மருந்துகள் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் ஆய்வகப் பரிசோதனைகளுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு சக்தி என்பது கொரோனா விஷயத்தில் எந்தளவிற்கு செயல்படும் என்பது உறுதியாகவில்லை. அதேசமயத்தில், அடுத்த 2021ம் ஆண்டில், மிகவும் பாதிக்கப்படும் நிலையிலுள்ள நபர்களுக்கான தடுப்பு மருந்து இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Hydroxychloroquine என்பது வைரஸ் தொற்றுக்கு எதிரான ஒரு தாக்கம் வாய்ந்த மருந்து என்பது நிரூபிக்கப்பட்டதில்லை. அதேசமயம், இது பல நோய்களுக்கான மருந்தாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

விரைவான பரிசோதனைகள் என்ற வகையில், ஆன்டிபாடி பரிசோதனை மற்றும் ஆன்டிஜன் பரிசோதனை என்று இருவகைகள் உள்ளன. வைரஸ் தொற்றிய முதல் வாரத்திற்குப் பிறகு ஆன்டிபாடி தொடங்குகிறது. இதில் நாம் கண்டறிவது கடினம். இதன்மூலம், பிளாஸ்மா நன்கொடையாளர்களை நீங்கள் கண்டறியலாம்.

அதேசமயத்தில், ஆன்டிஜன் பரிசோதனை என்பது ஆர்வமூட்டக்கூடியது. இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டால், தியரி ரீதியில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தேவையில்லை. இப்பரிசோதனை மருத்துவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகிய இருவருக்குமே எளிதான ஒன்று. முடிவுகள் அரைமணிநேரத்திற்குள் கிடைக்கும். ஆனால், இந்த ஆன்டிஜன் சோதனையின் நம்பகத்தன்மையில்தான் பிரச்சினையே.

அச்சோதனையின் முடிவில் பாசிடிவ் என்று வந்தால், அதில் நம்பகத்தன்மை அதிகம். நெகடிவ் என்று வந்தால்தான் சற்று சந்தேகமே. முடிவை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள, ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக்கு மருத்துவர் உத்தரவிடலாம்.

அறிகுறிகள் இல்லாத அல்லது அறிகுறிகள் வெளிப்படாத நோய் தொற்று உள்ளவர்களும் கொரோனாவைப் பரப்பி விடலாம். இந்தவகையான சூழல்களில் ஒருங்கிணைப்பு என்பது அவசியம். அறிகுறிகளை வெளிப்படுத்தாத, அதேசமயம் பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட நபர்களின் தொடர்புகளைக் கண்டறிய வேண்டும். அதேசமயத்தில், அறிகுறியுள்ளவர்களின் மூலம் பரவுதல் 60% என்ற அளவிலும், அறிகுறிகளை வெளிப்படுத்தாத நபர்களிடமிருந்து பரவும் அளவு 40% என்பதாகவும் இருக்கிறது.

இந்த வைரஸ் எங்கிருந்து விரைவாகப் பரவத் தொடங்கியது என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லைதான். அதேசமயத்தில் பீஜிங் மார்க்கெட்டிலிருந்து பெரியளவிலான தொற்று தொடங்கியது என்று கூறப்படுகிறது. பொதுவாக, மார்க்கெட் என்பது சற்று குளிர்ச்சித் தன்மையுள்ள மற்றும் கூட்டம் அதிகமுள்ள ஒரு இடம்தான். அதுபோன்ற ஒரு சூழலில் வைரஸ் பரவுதல் என்பது பெரியளவில் இருக்கும்தான்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், கொரோனா வைரஸ் சிகிச்சைத் தொடர்பாகவே கவனம் செலுத்தி, வேறு இதர முக்கிய மருத்துவ சேவைகளில் போதிய கவனம் செலுத்தாத நாடுகள் குறித்து கவலைகொள்ள வேண்டியுள்ளது. நாங்கள் மொத்தம் 80% நாடுகளின் பட்டியலைத் தயார் செய்தோம். அதில் 35% நாடுகள் மட்டுமே ‍இதர அத்தியாவசிய மருத்துவ சேவைகளின்பால் போதியளவு கவனம் செலுத்துபவையாக உள்ளன. இதர அத்தியாவசிய மருத்துவ அம்சங்களில், குழந்தைகளுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்குதல் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்கிறது.

ஆனால், இந்த கொரோனா களேபரத்தில், இந்த மிக முக்கிய அம்சம் பெரியளவில் குறைந்துவிட்டது வருத்தத்திற்குரியது.  இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏனெனில், இப்படியான அலட்சியத்தால், கொரோனாவுக்குப் பிந்தைய உலகம் பல புதிய சவால்களை சந்திக்கும்” என்றார் செளம்யா.

இவர், வேளாண்மை விஞ்ஞானி என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதனின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி: நியூஸ் 18