தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.

இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினிகாந்த்தின் இளைய மகளும், இயக்குனருமான சௌந்தர்யா, தன் கணவர் விசாகன் குடும்பம் சார்பாக ரூ.1 கோடி நிதிக்கான காசோலையை தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து நேரில் வழங்கினார். அபெக்ஸ் பார்மெசி என்ற நிறுவனத்தை விசாகன் நடத்தி வருகிறார். தங்கள் நிறுவனத்தின் சார்பாக இந்த நிதியை வழங்கி உள்ளார் சௌந்தர்யா.

முன்னதாக சௌந்தர்யா ரூ.1 கோடி நிதி வழங்கினார் என்றதும், அது நடிகர் ரஜினிகாந்த் சார்பாக வழங்கப்பட்டது என தவறாக செய்தி பரவியது குறிப்பிடத்தக்கது.