செஞ்சூரியன்:
லங்கைக்கு எதிரான டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

தென்ஆப்பிரிக்கா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செஞ்சூரியனில் நடந்தது.

இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 396 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 621 ரன்களும் குவித்தன. 225 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை 3-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 65 ரன்கள் எடுத்திருந்தது. 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி 180 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் தென்ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் மற்றும் 45 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இலங்கை அணியில் 5 வீரர்கள் காயத்தில் சிக்கியது பின்னடைவை ஏற்படுத்தியது.

‘நல்லவேளையாக நாங்கள் 21 வீரர்களை அழைத்து வந்தோம். இல்லாவிட்டால் அடுத்த டெஸ்டில் பேட்டிங் பயிற்சியாளர் கிரான்ட் பிளவர் 3-வது வரிசையிலும், நான் 4-வது வரிசையிலும் ஆட வேண்டியது இருந்திருக்கும்’ என்று இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்தார்.

இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.