ஆஸ்திரேலியாவுக்கெதிரான ஒருநாள் தொடர் – வென்றது தென்னாப்பிரிக்கா!

கேப்டவுன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றதன் மூலம், ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்க அணி.

முதல் போட்டியை தென்னாப்பிரிக்கா ஏற்கனவே வென்றிருந்தது. இந்நிலையில், இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பேட்டிங் செய்ய தீர்மானித்தது. டேவிட் வார்னர் 35 ரன்கள் மட்டுமே அடிக்க, அந்த அணியின் ஆரோன் பின்ச் மற்றும் ஷார்ட் தலா 69 ரன்களை அடித்தனர்.

மிட்ச‍ெல் மார்ஷ் 36 ரன்களை அடித்தார். முடிவில், 50 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 271 ரன்களை மட்டுமே எடுத்தது அந்த அணி.

தென்னாப்பிரிக்கா தரப்பில் அந்த அணியின் லுங்கி நிகிடி, 6 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார்.

பின்னர், சற்று எளிய இலக்கை விரட்டிய தென்னாப்பிரிக்க அணியில், துவக்க வீரர் மலன் 129 ரன்களை விளாசி மற்ற வீரர்களின் பணியை எளிதாக்கினார். ஹென்ரிக் கிளாசன் அரைசதமும், ஸ்மட்ஸ் 41 ரன்களும் அடித்தனர்.

முடிவில், 48.3 ஒவர்களிலேயே 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த அந்த அணி, 274 ரன்களை எடுத்து வென்றதோடு, தொடரையும் கைப்பற்றியது.