சென்னை:

ந்தி மொழியை திணித்தால் தமிழ்நாட்டில் மட்டுமல்ல தென் இந்தியாவில் யாரும் ஏற்க மாட்டார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

செப்டம்பர் 14-ம் தேதியான  இன்று, இந்தி மொழி அதிகாரப்பூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்ட நாளாக வட மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து டிவிட் பதிவிட்ட உள்துறை அமித்ஷா, இந்தியாவின் அடையாளமாக ஒருமொழிதான் இருக்க வேண்டும் என்பது முக்கியம். இன்றுள்ள நிலையில், நாட்டில் உள்ள அனைவரையும் ஒரு மொழியால் ஒருங்கிணைக்க முடியும் என்றால் அது அதிகமான மக்களால் பேசப்படும் இந்தி மொழியால் மட்டுமே முடியும் என்று தெரிவித்து உள்ளார்.

அமித்ஷாவின் கருத்துக்கு திமுக, அதிமுக, பாமக, மநீம  உள்பட அனைத்து தமிழக அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்தும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தெலுங்கானா மாநில கவர்னராக சென்றுவிட்ட நிலையில், தமிழகத்தில் பாஜகவுக்கு தலையில்லாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக ரஜினியை தமிழக பாஜக தலைவராக்க சிலர் முயற்சி மேற்கொண்டு வந்தனர். ஆனால், அவர் பிடிகொடுக்காமல் இருந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில், இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த்,  இந்தி மொழியை திணித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்  என்றவர், ஏன் தென்னிந்தியாவே ஏற்காது என்று தெரிவித்தார்.

நமது நாட்டில் பல மாநிலங்களில் பல மொழிகள் பேசப்பட்டு வருவதால், ஒரு மொழியை திணித்தால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறியவர், மற்ற நாடுகளைப் போல  நாட்டிற்கு பொதுமொழி என ஒன்று இருந்தால் தான் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது என்றும் நடிகர் ரஜினி தெரிவித்தார்.

பேனர் தொடர்பான கேள்விக்கு பேனர் கலாச்சாரம் முற்றிலும் தவிர்க்கப்படவேண்டும் என்றும், தனது ரசிகர்கள் பேனர் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே தெரிவித்திருக்கிறேன் என்றும் கூறினார்.