சென்னை:

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாக இன்று நடைபெற்று முடிவடைந்த நிலையில், தேர்தலில் 1579 பேர் ஓட்டு போட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் நீதிமன்றத்தின் உத்தரவு காரணமாக இன்று திட்டமிட்டப்படி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. ஜானகி எம்ஜிஆர் கல்லூரி யில் தேர்தல் நடத்த நீதிமன்றம் தடை விதித்த நிலையில், மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் இன்று தேர்தல் நடைபெற்றது.  தேர்தல் காலை 7:30 மணிக்கு தொடங்கி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது.

மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேர்தலில் இந்த முறை, நாசர், விஷால் தலைமையிலான  பாண்டவர் அணியும், நடிகர் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டனர்.

ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டு தேர்தல் நடைபெற்றது.    விறுவிறுப்பாக நடைபெற்ற தேர்தலில் நடிகர்கள், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர். மொத்தம்  1579 பேர் ஓட்டு போட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தற்போதைய நடிகர் சங்கத் தலைவரான நாசர், பாண்டவர் அணி சார்பில் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இதேபோல், பொதுச் செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் மீண்டும் அதே பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர். துணைத் தலைவர்களாக கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

பாண்டவர் அணியை எதிர்த்து களமிறங்கும் சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாக்யராஜ் நிறுத்தப்பட்டுள்ளார். பொதுச் செயலாளராக ஐசரி கணேஷ், பொருளாளராக பிரசாந்த் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். துணைத் தலைவர்களாக குட்டி பத்மினி, உதயா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

மேலும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதில், பாண்டவர் அணி சார்பில் சிபிராஜ், பிரசன்னா, பசுபதி, ராஜேஷ், சரவணன், மனோ பாலா, குஷ்பு, கோவை சரளா, சோனியா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இதேபோல், சுவாமி சங்கரதாஸ் அணி சார்பில் பூர்ணிமா பாக்யராஜ், காயத்ரி ரகுராம், ஆர்த்தி கணேஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த் உள்ளிட்டோர் செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.