மிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பாக அழைக்கப்பட்ட, முத்தமிழ் வித்தகர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினம் இன்று. அவர் நம்மை விட்டு மறைந்து 50 ஆண்டுகள் ஆனாலும், அவர் தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் ஆற்றிய பணிகள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ளது.

தமிழ், ஆங்கில, இந்தி என மும்மொழியிலும் முத்தாய்ப்பாக பேசுவதிலும், எழுதுவதிலும் முற்போக்கு சீர்திருத்த வாதியானவர்தான் காஞ்சிபுரம் தந்த தங்க தமிழன் பேரறிஞர் கா.ந. அண்ணாதுரை. பல முற்போக்கு சீர்திருத்த நாடகங்களையும் எழுதியும், இயக்கியும் அதில் ஒரு பாத்திரமாக நடித்தும் பெருமை சேர்த்தவர். தமிழ் திரைப்படங்களுக்கு கதை, வசனங்கள் எழுதியதன் மூலம் திராவிட சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியும் வந்தார்.

அனைவராலும் மிகவும் பிரபலமாக அண்ணா  அல்லது அறிஞர் அண்ணா என அழைக்கப்பட்ட காஞ்சிபுரம் நடராஜன் (கா.ந.) அண்ணாதுரை, முதலில் திராவிட மற்றும் தமிழ்நாடு தென்னிந்திய மாநில முதலமைச்சராக  காங்கிரஸ் அல்லாத தலைவராக இருந்தார்.

அரசியல் உலகில் மிகவும் செல்வாக்குப்  பெற்று விளங்கிய அண்ணா அவரின் மறைவிற்கு பின், இவரது பெயரால் “அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்” (அதிமுக) என்ற ஒரு கட்சி எம். ஜி ராமச்சந்திரனால் 1972 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.

தமிழக முதல்வராக தன்னுடைய முதல்வர் பணியை சிறப்பாக செய்த அண்ணாவின் புகழ் சாதாரண  மக்களிடையே பெரும் புகழை தேடித் தந்தது. இவர் நவீன இந்தியாவின் செல்வாக்கு மிகுந்த, வலிமையான அரசியல் தலைவர்களுள் ஒருவராக கருதப்படுகிறார். அது மட்டுமல்லாமல் இவர்  அனைவராலும் பாராட்டுப்பெற்ற ஒரு சிறந்த பேச்சாளராகவும், தமிழ் மற்றும் ஆங்கில இலக்கிய எழுத்தாளராகவும் மற்றும் ஒரு மேடை நாடகராகவும் புகழ் பெற்றார்.

அரசியல் ராஜதந்திரி, அடுக்கு மொழி வித்தகர், சிந்தனையைத் தூண்டும் பேச்சாளர், எழுச்சிமிகு எழுத்தாளர் போன்ற அடையாளங்களுக்குள் மட்டுமே இவரை அடைத்துவிட முடியாது. சரியாக வாராத தலை, அரை குறை தாடி வளர்ந்த முகம், வெற்றிலைக் கறைபடிந்த பற்கள், அழுக்கு படிந்த வேட்டி என்ற தோற்றத்துடன் வலம்வந்த அண்ணா தான், இன்றும் தொடரும் 50 ஆண்டு கால திராவிட ஆட்சிக்கு அடித்தளமிடுவார் என்று அன்று யாரும் கணித்திருக்க மாட்டார்கள்.

ச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று வந்த அண்ணாதுரை குடும்பத்தின் வறுமைநிலை காரணமாக பள்ளியிலிருந்து தனது படிப்பை தற்காலிகமாக நிறுத்தி விட்டு நகராட்சி அலுவலகத்தில் உதவியாளராகச் சில காலம் பணிபுரிந்தார்.

கல்வி: 1934 இல் இளங்கலாமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனைத் தொடர்ந்து முதுகலைமானி பொருளியில் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார்.

பட்டப் படிப்பை முடித்தவுடன் சென்னையில் உள்ள கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆறுமாத காலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். பிறகு பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றினார்.

ஆசிரியர் பணியை இடைநிறுத்தி பத்திரிக்கைத் துறையிலும், அரசியலிலும் ஈடுபாடு கொண்டார். 1937 முதல் 1940 வரை தந்தை பெரியார் அவர்களின் இதழ்களான குடியரசு, விடுதலை, பகுத்தறிவு போன்ற பத்திரிக்கைகளில் துணை ஆசிரியராகப் பணி புரிந்தார்.

1935ம் ஆண்டுவாக்கில்  தன்னை  நீதிக்கட்சியில் ஈடுபடுத்திக் கொண்டார். பிறகு நீதிக்கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராகப் பொறுப் பேற்றிருந்தார். பின்பு விடுதலை மற்றும் அதன் துணை பத்திரிகையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியரானார்.

பிறகு தனியாக திராவிட நாடு என்ற தனி நாளிதழைத் தொடங்கினார்.(திராவிட நாடு தனி கோரிக்கையை வலியுறுத்தி துவங்கப்பட்டது) 1944 இல் பெரியார் நீதிக்கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்தார். தேர்தலில் போட்டியிடுவதையும் கைவிட்டார்.

பெரியாரின் தனித்திராவிட நாடுக் கொள்கையின் காரணமாகவும், தன்னைவிட வயதில் இளைவரான மணியம்மையாரை பெரியார் மணம் பிரிந்துகொண்டதால் கருத்து வேறுபாடு கொண்டு, அண்ணாதுரை மற்றும் பெரியாரின் அண்ணன் மகனும் பெரியாரின் வாரிசு என கருதப்பட்டவரும், திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவருமான ஈ.வெ.கி. சம்பத் மற்றும் திராவிட கழகத்திலிருந்து பிரிந்தவர்களுடன் இணைந்து புதியக் கட்சி துவங்க முடிவெடுக்கப்பட்டு, அதன்படி (17.10.1949) அன்று அக்கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கெதிராகப் பல்வேறு போராட்டங்களில், பல்வேறு காலக்கட்டங்களில் ஈடுபட்டு அவ்வாட்சியை எதிர்க்க தொடங்கினார். இருதியில் 1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டதன் விளைவாக மக்களின் ஆதரவையும் ஆவரும், அவரது கட்சியான திராவிட முன்னேற்றக் கட்சியும் அபரிவிதமான செல்வாக்கை பெற்றது.

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு

அறிஞர் அண்ணாதுரை அவரது கட்சியின் முக்கிய கொள்கை முழக்கமாகவும், அவரது கட்சியின் பண்பாடாகவும் இம்மூன்று வார்த்தைகளை முன்மொழிந்தார். பொதுவாழ்வில் ஒவ்வொருவரும் கடைபிடிக்க வேண்டிய அடிப்படையான பண்பாடுகளே இவை. கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவை தனி்ப்பட்டு ஒர் அமைப்புக்குள் இருப்பவர் கடைப்பிடிக்க வேண்டிய குணநலன்களாக கருதப்படுகின்றது.

கண்ணியம் என்பது பொதுவாக மற்றவர்களுடனும், அதிலும் சமுதாயத்தில் அரசிலில் கலந்து கொள்ளும் அனைவருடனும் ஒருவருக்கொருவர் அளித்திடும் மதிப்பு, மரியாதை என்பனவற்றைக் குறிக்கும். வேறுபட்ட கட்சிகள், மாறுபட்ட வெறுப்போ, விரோதமோ இல்லாமல் எதிர் நிற்பவர்களையும் நண்பர்களாகப் பாராட்டும் தன்னை பொது வாழ்வில் மிகவும் தேவையான ஒரு பண்பாடு ஆகும் என்பது அண்ணாவின் கொள்கையாகும்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம்

இந்தியா 1950 இல் அரசிலமைப்புச் சட்டம் இயற்றப்பட்டதற்கு பின்பு இந்தியா ஒரு குடியரசு நாடு என அறிவிக்கப்பட்டதற்கு பின்னர் இந்திக்கு இந்திய அரசியலமைப்பில் தன் அங்கீகாரம் கிடைத்தது. இந்தியாவின் அலுவலக ஆட்சி மொழியாக 15 ஆண்டுகளுக்குப் பிறகு 1965 இல் அறிவிக்கப்பட்டது.

காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 27, 1938 இல் நடைபெற்ற முதல் இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணாதுரை முதல் தளபதியாகப் பொறுப்பேற்று நான்கு மாதம் சிறை தண்டனைப் பெற்றார்.

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடராசன் – தாளமுத்து இருவரின் உயிரிழப்பிற்குப் பிறகு இந்தி திணிப்பிற்கு எதிராக தமிழர்களின் சக்தியை ஒன்று திரண்டது. அவ்வாண்டின் இறுதிக்குள் பதவி விலகவும் செய்தது. பின்னர் 1940 ல் மதராசு ஆளுநர் எர்ஸ்கின் பிரபு கட்டாய இநதிக் கல்வியை விலக்கினார்.

இந்தியாவின் ஆட்சி மொழியக இந்தி அறிவிக்கப்பட்தை கடுமையா எதிர்த்த அண்ணாதுரை மத்திய அரசுக்கு எதிராக போர்குரல் எழுப்பினார்.  இந்திய மொழிகளில் இந்தியை மட்டும் ஆட்சி மொழியாக வைப்பது – இந்தியை தாய் மொழியாகக் கொண்ட நல்ல கால் உடையவர்களுக்கும், இந்தியை தாய்மொழியாகக் கொள்ளாத ஊனக்கால் உடையவர்களுக்கும் இடையே வைக்கும் ஓட்டப் பந்தயம் போன்றது என்றார்.

1956ம் ஆண்டு  திருச்சியில் நடைபெற்ற திமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி அண்ணாதுரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகி நெடுஞ்செழியனை அப்பொறுப்பில் நியமித்தார். அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி இந்தியப் பொதுத்தேர்தலில் போட்டியிட முடிவெடுத்து தேர்தலில் பங்கு கொண்டது.

1957ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக போட்டியிட்டு 15 சட்டப்பேரவை தொகுதிகளை யும், இரண்டு நாடாளுமன்றத் தொகுதிகளையும் வென்றது.  அண்ணாதுரை காஞ்சிபுரத்தில் போட்டியிட்டு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார். திமுக முதல் முறையாக மதராஸ் மாநில சட்டப்பேரவைக்குள் நுழைந்தது.

1962ம் ஆண்டு  திமுக மிகப்பெரியக் கட்சியாக காங்கிரஸை அடுத்து உருவெடுத்திருந்துது. அப்பொழுது நடைபெற்றத் தேர்தலில் திமுக 50 தொகுதிகளை வென்றது. அண்ணாதுரை அத்தேர்தலில் தோல்வியை தழுவினார். பின்பு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அண்ணாதுரை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

1967ம் ஆண்டு  நடைபெற்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்றுத் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றார்.

ஒருமுறை சில இங்கிலாந்து மாணவர்கள் அண்ணாவை பரிசோதிப்பதற்காக அவரிடம், “ஏனென்றால்” என்ற வார்த்தையை மூன்று முறை தொடர்ந்து வருகிற மாதிரி வாக்கியம் கூற முடியுமா? என்ற கேட்டனர்.

அதற்கு அண்ணாதுரை அவர்கள், “No Sentence can begin with because, because, because is a conjunction” அதாவது எந்த வாக்கியமும் ஒரு வார்த்தையை கொண்டு துவங்காது. அவ்வார்த்தையை ஏனென்றால், ஏனென்றால், ஏனென்றால் என்பது ஓர் இணைப்புச் சொல் என்றார்.

அண்ணாதுரை மிகச்சிறந்த சொற்பொழிவாளரும், மேடைப் பேச்சாளரும் ஆவார். தமிழில் சிலேடையாக அடுக்கு மொழிகளுடன்., மிக நாகரிகமான முறையில் அனைவரையும் கவர்கின்ற வகையில் தனிக்குரல் (கரகரத்த குரலில்) வளத்துடன் பேசும் திறனும், எழுத்தாற்றலும் பெற்றவர்.

அண்ணாதுரை முதலமைச்சரான இரண்டு வருடத்திற்குள் புற்று நோய் தாக்குதலுக்குள்ளாகி, மருத்துவ பராமரிப்பிலிருக்கும் பொழுது 3 பிப்ரவரி, 1969ம் ஆண்டு பிப்ரவரி 3ந்தேதி மரண மடைந்தார். அவரது, இறுதி மரியாதையில் சுமார் 1 கோடியே 50 லட்சம் பேர் கலந்து கொண்டு இறுதி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வு கின்னஸ் உலக புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவை போற்றும் வகையில் இவ்விடம் அண்ணா சதுக்கம் என்ற பெயரில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.