பேச்சு நடத்த வடகொரியாவை அழைக்கும் தென்கொரியா!

--

சியோல்: எல்லைப் பகுதியில் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க, வடகொரிய தரப்பில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று அழைப்பு விடுத்துள்ளது தென்கொரியா.

இதுதொடர்பாக கூறப்படுவதாவது; சமீபத்தில், வட கொரிய எல்லைக்குள், தென்கொரிய ராணுவ வீரர்கள் பலுான்களை பறக்கவிட்டு, விஷம பிரச்சாரம் செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

இந்த நடவடிக்கையை கைவிடாவிட்டால், விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எல்லையில் உள்ள இரு நாடுகளின் தகவல் தொடர்பு அலுவலகம் குண்டு வைத்து தகர்க்கப்படும் என்றும் வட கொரியா சார்பில் மிரட்டல் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், தென்கொரிய அதிபர் மூன் ஜெ இன் தனது நாட்டு உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன்முடிவில் அவர் கூறியதாவது, “வட கொரியாவுடன் அமைதியான நல்லுறவை பின்பற்றவே விரும்புகிறோம். தகவல் தொடர்பு அலுவலகத்தை தகர்ப்பது போன்ற நடவடிக்கைகள், எல்லைப் பிரச்சினையை மேலும் மோசமாக்கி விடும். எல்லா பிரச்சினைகளுக்கும், பேச்சுவார்த்தை மூலமாக சுமுகத் தீர்வு காண தயாராக உள்ளோம்.

வடகொரிய அரசு, தேவையில்லாத பதற்றத்தை உருவாக்குவதை விடுத்து, மீண்டும் பேச்சு நடத்த முன்வர வேண்டும். வடகொரிய அதிபருடன் ஏற்கனவே நடத்திய பேச்சின் அடிப்படையில், இருதரப்பு பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதற்கு தயாராக உள்ளோம். எனவே, இந்த முயற்சிகளுக்கு வடகொரியா ஒத்துழைக்க வேண்டும்” என்றார் அவர்.