இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் தென்கொரிய நிறுவனங்கள் – ஏன்?

சென்னை: சீனாவில் செயல்படும் தென் கொரிய நிறுவனங்கள், அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன.

அமெரிக்கா – சீனா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் போரே, தென்கொரிய நிறுவனங்களின் இந்த முடிவிற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பான பல கோரிக்கைகள், சென்னையில் உள்ள தென்கொரிய தூதரக அலுவலகத்திற்கு வந்துள்ளதாகவும், இவற்றில் சில ஆரம்ப நிலையில் உள்ளதாகவும், மற்றவை அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

தென்கொரிய தூதரகத்தில் பணிபுரியும் யுப் லீ என்ற அதிகாரி கூறுகையில், “இரண்டு இரும்பு தொழிற்சாலைகள், சில ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மற்றும் சேவைத்துறையை சேர்ந்த ஒரு நிறுவனம் ஆகியவை, சீனாவில் இருந்து வெளியேறி இந்தியாவில் தொழில் துவங்க விரும்புகின்றன. போஸ்கோ மற்றும் ஹூண்டாய் எஃகு தொழிற்சாலை, ஆந்திராவில் தொழிற்சாலை அமைக்கும் வாய்ப்புள்ளது.

ஆந்திராவில் எஃகு தொழிற்சாலை அமைக்க, துறைமுக வசதியுடன் கூடிய 5 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. முதலீடு செய்ய வேண்டும் என அந்நிறுவனங்கள் முடிவெடுத்தவுடன், அம்மாநிலத்தில் தொழிற்சாலை துவங்கப்படும். இந்தியாவில், தொழில் துவங்க தென்கொரியாவை சேர்ந்த இன்னும் சில நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், கொரோனா காரணமாக அந்த நிகழ்வு தள்ளிப் போகிறது” என்று பேசினார்.